வியாழன், 3 ஏப்ரல், 2014

சரகர் என்ற மாபெரும் மருத்துவர்......


ஆயுர்வேதத்தில் சரகர் (கி.மு.200) பெயர் பிரபலமானது. சுஸ்ருதர் அறுவைச் சிகிச்சையில் தேர்ந்தவர் என்றால் , சரகர் மருத்துவர். தம் காலத்தில் இருந்த மருத்துவ நிலையை 'சரக சம்ஹிதை' என்ற நூலில் வர்ணித்திருக்கிறார்.

கருப்பையில் சிசுவின் வளர்ச்சி, மனித உடற்கூறுகள், வாதம், பித்தம், கபம், என்ற அடிப்படையில் மனித உடல் இயங்கும் முறை முதலியவற்றையும், நோயைக் கண்டறியும் முறையையும் அதற்க்கான சிகிச்சையையும் விவரமாக தந்திருக்கிறார். வயதானவர்களின் உடல் மீண்டும் புத்துணர்வு பெற வழி வகைகள் கூறியிருக்கிறார். ஒரு நோயாளியை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும். நோய் வரக்காரணம் என்ன என்பதையும் நோயாளியின் உடலமைப்பையும், வயது, சக்தி, ஆகியவற்றொடு அவருடைய நிலை, எந்த பருவகாலத்தில் நோய்க்கு ஆளானார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

மூலிகைகள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை சரக சம்ஹிதை பரிந்துரைக்கிறது. சில மிருகக் கொழுப்புகளும், தாதுக்களும் உபயோகப்படுத்தப்பட்டன. மருந்துகள் அவற்றின் செயல்பாட்டை வைத்து, 50 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவை கண், காது, தோல், முதலிய பாகங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்று தனித்தனியே  பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

பொடி, பசை, சாறு, வடிகட்டியது, புளிக்க வைத்த, நெய், எண்ணெய், நாசியில் வைத்து நுகர்வது, எனிமா என்று இவர் பலவகை மருந்துகளை வர்ணித்திருக்கிறார். அன்றை காலத்து சமூகப் பழக்கவழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். உணவு, உடை, புகை, மது அருந்தும் பழக்கம் இவை பற்றி இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

சரக என்றால் ஓரிடத்தில் தங்கியிராதவர். அவர் பிறந்த இடம் பற்றி எந்த தகவலும் இல்லாததால், சரகர் ஒரு மருத்துவராக, ஒவ்வோர் இடமாகப் போய்க் கொண்டிருந்தார் என்று கொள்ளலாம். அவர் புத்தருக்கு முன் (கி.மு. 400) வாழ்ந்தார் என்று தெரிகிறது.

பிரம்மனின் பரம்பரையில் வந்த மருத்துவர் சரகர். தக்ஷ பிரஜாபதி, அஸ்வினி குமாரர்கள், இந்திரன், பரத்வாஜர், ஆத்ரேயர், அடுத்து வருபவர்கள் சரகரும் அக்னிவேசரும். பரத்வாஜர் இந்திரனை அணுகி, 'நோய்கள் எல்லாம் உயிர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. இதை எவ்வாறு எதிர்கொள்ளலாம்' (வியாதயா ஹி சமுத்பன்ன: ஸர்வ ப்ராணி பயங்கர: தத் ப்ருஹி மே ஸமோபாயம்) என்று சொல்லுங்கள்! என்கிறார். பரத்வாஜர் இந்த விஞ்ஞானத்தை ஆத்ரேயருக்குக் கற்றுக்கொடுக்க, அவர் அதை சரகர், பராசரர், அக்னிவேசருக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

தேவர்கள் மகிழ்ந்து, தெய்வீக குணங்களான புத்தி, சித்தி, ஸ்ம்ருதி(நினைவாற்றல்), மேதா (ஞானம்), த்ரிதி (பொறுமை) கீர்த்தி, க்ஷமா (பொறுத்துக் கொள்ளுதல்), மற்றும் தயை (கருணை) போன்ற குணநலன்களை எல்லாம் இந்த விஞ்ஞானத்தில் சேர வைத்தனர். இந்த குணங்கள் அர்பணித்தவர்களையும் ஆட்கொண்டது.
 
 
 
 நன்றி :மக்கள் சேவையே மகேசன் சேவை
 

1 கருத்து: