புதன், 14 மே, 2014

மீண்டும் பொழுது புலர்ந்தது.........


இன்னிக்கும் ஆபிஸ் போகணும்.....
இன்றைய செய்தித்தாள் பார்த்து கத்தினேன்........என்னுடைய போட்டோ........ கண்ணீர் அஞ்சலி பக்கத்தில்....
ஓ என்ன விந்தை..........
சிந்தித்துப் பார்த்தேன்......நேற்று இரவு படுக்கைக்குப் போன சிறிது நேரத்தில் பயங்கர நெஞ்சு வலி....பின் அப்படியே தூக்கத்துக்குச் சென்றதுதான் நினைவில் இருக்கிறது........
.
இப்பொழுது விடிந்து விட்டது. மணி 10 AM. ஏன் இன்னும் காபி கொண்டு வரவில்லை. தாமதமாக போனால் இதுதான் சான்ஸ் என்று பாஸ் கடித்துக் குதறுவார்.
"எல்லாம் எங்க போனீங்க?" கத்தினேன்.
என்னுடைய அறைக்கு வெளியில் கூட்டமாக இருப்பது போல் ஒரு சலனம். போய்ப் பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
"ஐயோ என்ன இது????? தரையில் நான் கிடத்தப் பட்டிருக்கிறேன்.
"நான் இங்கதான் இருக்கேன்....." நான் கத்தினாலும் யாரும் அதை கவனிக்கவில்லை.
"நான் இன்னும் சாகவில்லை...." மீண்டும் கத்தினேன். ஆனால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
நான் மீண்டும் என் படுக்கை அறைக்குச் சென்றேன்.
எனக்குள் கேள்வி - "நான் இறந்து விட்டேனா?"
எங்கே எனது மனைவி, குழந்தைகள், அப்பா அம்மா, நண்பர்கள்?
பக்கத்து அறையில் அனைவரும் அழுது கொண்டிருந்தனர்...... ஒருவருக்கு ஒருத்தர் ஆறுதல் கூறிக் கொண்டே.....
எனது மனைவியும் அழுது கொண்டிருந்தாள்......மிகவும் சோகமாக காணப்பட்டாள்........
எனது சின்ன குழந்தைக்கு எதுவும் புரியா விட்டாலும் அதுவும் அம்மாவின் சோகத்தைக் கண்டு அழுது கொண்டிருந்தது.
எப்படி நான் இறக்க முடியும் என் குழந்தைகளிடம் சொல்லிக் கொள்ளாமல்...... அதுவும் அவர்களுக்கு நான் இல்லாமல் எதுவும் முடியாது......என் மனைவியைப் போல் ஒரு caring wife இந்த உலகத்தில் கிடையாது....ஐயோ என் அப்பா அம்மாவிடமும் சொல்லவில்லையே.......என்னுடைய நண்பர்கள் என் கூட இல்லாத பட்சத்தில் நான் என் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்திருப்பேனே......... எனக்கு தேவைப்படும் சமயத்தில் எல்லாம் என் கூட இருந்த நண்பர்களுக்கு நன்றி கூட சொல்லவில்லையே......அதே சமயத்தில் அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் நான் அவர்கள் கூட இருக்கவில்லையே......கடவுளே......
யார் அந்த மூளையில் நின்று அழுது கொண்டிருப்பது.......ஓ என்னுடைய பழைய நண்பன்..........ஒரு சின்ன மன வருத்தத்தில் எங்களுடைய ஈகோவே எங்களைப் பிரித்தது..........
நான் அவன் அருகில் சென்றேன்........"நண்பா என்னை மன்னித்துவிடு.......இதுவரை நடந்த அனைத்தையும் மறந்து விடு......இன்னும் நீ என்னுடைய best friend"
ஆனால் அவனிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை.....ச்சே இவ்வளவு சொல்லியும் இன்னும் அவன் ஈகோவை விடவில்லையே........ஓ அவனால் என்னைக் காண முடியவில்லையோ..........
“உண்மையிலேயே இறந்து விட்டேனோ”.........
நான் எனக்கு அருகில் சென்று அமர்ந்தேன்........ கதறினேன்…….
"ஓ கடவுளே...........எனக்கு இன்னும் சிறிது காலம் கொடு. என் மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள் அனைவரையும் எவ்வளவு நேசிக்க முடியுமோ அவ்வளவு நேசித்து விட்டு வருகிறேன்."
என்னால் தாங்க முடியாமல் கதறினேன்.
"கடவுளே இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடு" கத்தினேன்.
"என்னப்பா தூக்கத்துல கத்தறீங்க? ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? " என் மனைவி என்னை மெதுவாக எழுப்பினாள்.
ஆ கடவுளே........இது கனவா? நான் இவ்வளவு நேரம் தூக்கத்தில் இருந்தேனா?
என் மனைவி என்னுடன் இருக்கிறாள். என் குரலைக் கேட்கிறாள். இதுதான் என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம்.
"கடவுளே இரண்டாவது வாய்ப்பைக் கொடுத்ததற்கு நன்றி.........."
நண்பர்களே.....இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது....... உங்களது ஈகோவை விடுங்கள். அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

வாழ்க்கை - பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்......... அதை சந்தோஷமாக வாழுங்கள்......யாருக்கும் தீங்கு செய்யாமல்.......
"எல்லாரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே............."

செவ்வாய், 13 மே, 2014

கதை - ஆங்கிலமும் பாதணியும் !!


ஒருவன் ஒரு அழகான ஊரில் குடும்பத்துடன் ஆனந்தமாக வாழ்ந்து வந்தான். அந்த ஊரெங்கும் பசும்புல் தரைகள் நிறைந்திருந்தன. நதியில் தாழம் புதர்களின் வழியே நதி நீர் வழிந்தோடியது.

எந்த ஊருக்கு ஒரு நாடோடி வந்தான். அவன் காலில் தோலினால் செய்யப்பட ஒரு அழகான பாதணி அணிந்திருந்தான்.

அதைப் பார்த்ததும் இவனுக்கு அப்படி ஒரு பாதணி இருந்தால் எப்படி இருக்கும் என ஆசை வந்தது. புதியவனுக்கு தன்னுடைய ஒரு வருட விளைச்சலை கொடுத்து அவனிடம் இருந்து பாதணிகளை வாங்கிக் கொண்டான்.
சில நாட்கள் சென்றன. தன்னுடைய பாதணியை விட்டு அவன் பிரியவே இல்லை. ஆனால் விளைச்சலை முழுவதுமாக அவனிடம் கொடுத்து விட்டதால் அவன் குடும்பம் பசியில் வாடியது. இருந்தாலும் அவன் தன்னுடைய பாதணிகளை அழகு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வயலில் நடப்பது இப்போது எளிதாக இருந்தது. முட்கள் குத்தும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. அவனுக்கு இந்தப் பாதணி இல்லாமல் தான் இவ்வளவு நாள் எப்படி இருந்தோம் என எண்ணி எண்ணி வருத்தப்பட்டான்.தூங்கும் போதும் அவன் பாதணியுடனேயே தூங்கினான்.
ஆனால் அவனுக்கு ஒரு பிரச்சினை வந்தது. தூங்கும் போது அவனுடைய பாதணிகள் அவனுடைய காலில் இருந்து நழுவி விழுந்தன. அது அவனுக்கு பிடிக்கவில்லை. அப்போது அந்த ஊருக்கு திரும்ப அதே நாடோடி வந்தான். நாடோடியிடம் என்னுடைய பிரச்சினையை அவன் சொன்னான்.
நாடோடி ஒரு யோசனை சொன்னான். அதன்படி அவன் தன்னுடைய வயல், தோப்பு அனைத்தையும் அந்த நாடோடிக்கு எழுதிக் கொடுத்து விட்டு அந்த நாடோடியிடம் இருந்து நூறு பாதணிகளை வாங்கினான். அந்தப் பாதணிகளை அவன் படுக்கை முழுவதும் பரப்பி அதன் மீதி உறங்கினான்.

சில ஆண்டுகளில் அவன் குடும்பம் வறுமையில் வீழ்ந்து அழிந்தது. அவனும் அவனுடைய படுக்கையில் பாதணிகளுக்கு நடுவே பசியில் இரண்டு கிடந்தான். ஆனால் சாகும் போது கூட தன்னுடைய அழிவிற்கு இந்த பாதணி தான் காரணம் என்பதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.
நண்பர்களே நம்முடைய ஆங்கில மோகமும் அவனுடைய பாதணி மோகமும் ஒன்று தான். தொடர்பு மொழியாக கற்க வேண்டிய ஒரு மொழியை நாம் வாழ்க்கையின் ஒரே வழியாக ஏற்றோம். இன்று நம்முடைய நிலங்கள், கலைகள், வரலாறு , நதிகள் , வாழ்க்கை முறை, பண்பாடு அனைத்தையும் இழந்து நிற்கிறோம். இருந்தும் நம்முடைய வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள மறுக்கிறோம்.

நாம் மீள நம்முடைய மொழியின் மீட்சி அவசியம் என்பதை இன்னும் புரிந்து கொள்ள மறுக்கிறோம். வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். எப்படி தாய்மொழியில் கல்வி கற்கும் நாடுகள் சிறந்து விளங்குகின்றன என்பது கண்ணுக்கு முன்னே தெரிந்தும் நாம் நம் தாய் மொழியைப் பழிக்கின்றோம்.

 தமிழர்கள் வாழ்வதும் வீழ்வதும் தமிழின் கைகளில் இருக்கிறதே அன்றி வேறு எதனின் கையிலும் இல்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.


ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார்.

வெளிநாட்டில் திறமையான கலாசாலையில் மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.
அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள்.
மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.


ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச் சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான்.


ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர்.


உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.
முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.


முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.
“You can educate fools; but you cannot make them wishes”.


# நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது !!!

பட்ட மரத்தின் பாட்டு.

ஒரு சட்டிக்குள்ளே ஒரு விளக்கு. சட்டி உடைகிறது, விளக்கு அணைகிறது. இதுதான், இவ்வளவுதான் வாழ்க்கை. பந்த பாசச் சேற்றிலே செய்த சட்டி. சட்டி சூடேறி கைநழுவி உடைவது போல் காமத்தால் சூடேறிய தேகம் கெடுகிறது.(சட்டி சுட்டதடா கை விட்டதடா. புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா.) ஓட்டைச் சட்டியை வைத்துக் கொண்டு தெருத்தெருவாய் பிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும், ரசமது ஒழுகிய பின்னே வெறும் சோற்றை யார்தான் உண்பார். சுவையில்லாத சோற்றை நாய் கூட ஏற்காதே. காமப் பசியாலும், பழகிய ருசியாலும் காமமும், தாபமும், கோபமும் வெறுப்பும் கொண்டு சக்தியிழந்த வெறும் உடம்பை என்னதான் செய்ய முடியும். எதுக்கும் உதவாத அந்த சடத்தை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டியதுதான். உயிர் பொருள் எதுவோ அதுவே உயர் பொருள் ஆகும். எதைக் கொண்டு இன்னொரு உயிரை உருவாக்குகிறாயோ, அதுவே உனக்குள்ளும் உயிராக இருக்கிறது என்பதை நீ உணரவில்லை என்றால், நீ உருவாக்கிய உயிரே உனக்கு கொள்ளி வைக்கும். சாகக் கிடக்கும் எருமையை ஈ மொய்க்கும், எறும்பு மொய்க்கும், கழுகு கொத்தும், காக்கை உண்ணும
 
இதைத்தான் பட்டினத்தார் பாட்டாக பாடித் தள்ளி விட்டார். இவ்வளவு வெறுப்பாய் பாடியிருக்கிறாரே என்று சிந்தித்துப் பார்த்தால், மனிதன் பருவம், காலம், நேரம் எல்லாம் கருதாது விலங்கினும் கேவலமாக காமத்தீயில் கருகிச் சாகிறானே என்ற ஆதங்கத்தில் பாடியிருக்கிறார் என்பது புரியும். மருந்து, மாத்திரையே உயிர் என்று வாழ்பவர்கள் எல்லாம் உயிரே மருந்து என்பதை உணராமல் போனவரே. உயிர் பலம் இல்லாதவர்கள் தேக பலம் கெடும். தேக பலம் இல்லாதவர்கள் இறைநிலை அடைவது எப்போது ? மனிதன் எந்தக கட்டுப்பாடும் இல்லாமல் மிருகத்தைப் போல வாழ்வதை சுதந்திரம் என்று நினைக்கிறான். அதனால்தான் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை அடித்துக் கொள்வது போல் காமக் குற்றங்களைச் செய்கிறான். பரிணாமத்தின் முடிவானவன் மனிதன் என்று கருதப்பட்டாலும், மிருகப் பதிவுகள் இன்னும் முற்றிலுமாக அவனிடமிருந்து நீங்கி விடவில்லை.
காமனை எரித்தார், ரதி மன்மதனை எரித்தார் என்றெல்லாம் கதை சொல்வார்கள். உண்மை சூட்சுமத்தை யார்தான் சொல்வர். மூன்றாவது கண்ணான நெற்றிக்கண், அதாவது புருவ மத்தியில் விளங்கும் ஞானக்கண் கொண்டு காமனை எரித்தார். இது கொண்டாடும் விஷயமாகிப் போனதே தவிர, கடைபிடிக்கும் ஒழுக்கம் என்பதை மறைத்து விட்டார்கள் கயவர்கள். எமனையும் நெற்றிக் கண்ணால்தான் எரித்தார். பாசக் கயிற்றை அறுத்து எரிந்தார். சூட்சுமம் புரிகிறதா ?

இவ்வளவும் எதற்காக என்றால்? விஷயம் இருக்கிறது. அதாவது, சுக்கில, சுரோணிதத்தால் ஆனதே இந்தப் பிறவி. ஆணுக்கு 99% சுக்கிலம், 1% சுரோணிதம். பெண்ணுக்கு 99% சுரோணிதம், 1% சுக்கிலம் இதுவே படைப்பின் இரகசியம். இதில் மாறு பாடு உள்ளவர்களுக்கு இயல்பும், தன்மையும் மாறியிருக்கும். ஆண் தன்மை உள்ள பெண்ணாகவோ, பெண் தன்மை கலந்த ஆணாகவோ, அலியாகவோ உள்ளதெல்லாம் இவற்றின் விளையாட்டே. சுக்கில சுரோணிதங்களே உயிர். சுக்கலம் திரவப் பொருளாகவும், சுரோணிதம் திடப் பொருளாகவும் காணப்படும். சுக்கிலத்தை கூட்டிக் கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. சுரோணிதம் அதிகமாக்க ஈஸ்ட்ரோஜன் கொடுக்க வேண்டும். இவற்றின் கூட்டணியே குண்டலினி. ஒரு ராட்சஷிக்கு சுரோணிதத்தைக் கூட்டினால் அவள் குணவதியாவாள். குணம் மாற சரீரமும் மாறும். சரீரம் மாற வேண்டுமென்றால் சுக்கில சுரோணிதத்தைத் தொட்டுவிட வேண்டும். இரண்டையும் சேர்த்துத் தொட்டு விட்டால் அதுவே சாகாக் கலை.
படைத்தவன் எதையும் அழிக்க நினைப்பதில்லை. படைக்கப்பட்டவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதோடு, தன்னோடு சார்ந்துள்ள விஷயங்களையும் அழிக்கிறான். ஊறுகாய் நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு எவ்வளவு அவசியமோ, அது போல உடலைப் பாதுகாக்க நாண்ட நாள் அழியாமல் வைத்திருக்க உயிர் அவசியம். அதற்கு உயிர் பொருள் அவசியம். அது எதுவெனில் சுக்கில, சுரோணிதமே. எந்த ஒரு மனிதனுக்கு சுக்கிலத்தில் பலமில்லையோ, அவன் எப்போதும் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகிக் கொண்டே இருப்பான். எவன் ஒருவனுக்கு விந்து நீர்த்து போய் இருக்கிறதோ, அவன் உடல் பலவீனமாகவே இருக்கும். தண்ணீர் இல்லாமல் பூமியே வறண்டு வெடிப்பு விட்டு ஊரே உருக்குலைந்து காணப்படுவது போல,சுக்கிலம் குறையக் குறைய உடல் வறண்டு, தோல் சுருங்கி, தேகம் உருக்குலைந்து போய் விடுகிறது. நமக்கு ஒரு உயிர் அணுவைக் கூட உற்பத்தி செய்யத் தெரியாது. நமக்காக நம் உடல் உயிர் அணுக்களை உற்பத்தி செய்து தருகிறது. நாமோ அதையெல்லாம் வீணே செலவு செய்வதோடு, பலமில்லாத அடுத்த தலைமுறையையும் உருவாக்கி விடுகிறோம். அவர்களுக்கு நாம் சேர்த்து வைத்த ஒரே சொத்து வியாதிகள்தான்.

தண்ணீர் வளத்தை ஒத்துதான் நிலத்தின் வளம் அமையும். ஏனைய எல்லா சத்துக்களும் இருந்தாலும் நீர் வளம் இல்லாத நிலம் தரிசே. சில சித்தர்களின் பாடலைக் கேட்கும் போது, இவர்கள் ஏன் இப்படி உடலையும், பெண்களையும், காம உணர்வுகளையும் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அது ஒரு கலை. வெறுப்பை உண்டாக்கி ஒரு விஷயத்தில் இருந்து மனதை மடைமாற்றும் முயற்சி. அவ்வளவுதான். மழையே இல்லாமல் தண்ணீர் கிடைக்காத தேசத்தில் ஏரித் தண்ணீர் இருக்கும் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதுவும் வறண்டு போனால், அவ்வளவுதான் பஞ்சம், பசி, பட்டினி, நோய், களவு எல்லாம் ஏற்பட்டுவிடும். பயிர்கள் பஞ்சத்தில் வாடுவது போல், தலையில் உள்ள மயிர்கள் நரைத்துப் போய்விடுகிறது. அதன் மினுமினுப்பு மாறி விடுகிறது. மனிதனைத் தவிர எந்த இனமும் சுய இன்பம் அனுபவிப்பதில்லை. கருவுற்ற பெண் இனத்தோடு கூடுவதில்லை. தன்னுடைய உயிர் பொருளை வீணாக்குவதில்லை. தன்னால் இயலாத நிலையில் முயற்சிப்பதில்லை. எந்நேரமும் அதே சிந்தனையிலேயே இருப்பதில்லை. வாடிய பயிர்களைக் கண்டு மட்டுமல்ல இவ்வாறு உயிர் பொருளை இழந்து தவிக்கும் மனிதர்களையும் கண்டு வாடினார் வள்ளல் பெருமான். ஆகவேதான் சாகாக் கலையை கடை விரித்தார். ஆனால் கொள்வார் இல்லையே என்பதுதான் அவர் வருத்தம்.

நாம் எல்லோரும் நினைப்பது போல் உடலுக்குள் உயிர் இல்லை. உயிருக்குள்தான் உடல் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு உடலை உயிரோடு சேர்த்தே பல காலம் இருத்துவதே தவம். இப்படி உயிரை உணர்ந்து, உயிரோடு உடலை இணைத்துப் பழக்கப்பட்டவர்கள், இதையே பேரின்பம் என்கின்றனர். இந்த இன்பத்தை விட சிறந்த இன்பம் வேறில்லை என்று நம்மை விட்டு ஒதுங்கிப் போய் வாழ்கிறார்கள். காரணம் நமது எந்த கருத்துக்களிலும், செயல்களிலும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை

:மௌனத்தின் நாதம்'

''அடுத்து விடும் மூச்சு நின்னா போச்சு.''

''அடுத்து விடும் மூச்சு நின்னா போச்சு.''

ஆம் சுவாசமே நம் உயிர் வாழ்விற்கு ஆதாரம். ஆனால் அதைக் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். சுவாசம் பற்றிய அறிவு அனைத்து தரப்பு மக்களுக்கும் அவசியமான ஒன்றாகும். பலப்பல தேவையில்லாத விஷயங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்கிற நாம், நம் உயிர் வாழவிற்கு ஆதாரமான சுவாசம் பற்றி யோசிக்கக் கூடச் செய்வதில்லை. சுவாசத்தை வாசி என்பார்கள். வாசியை மாற்றிச் சொன்னால் சிவா. ஆக சுவாசம் கடவுளுக்கு நிகரான அல்லது கடவுளை அறிய உதவும் விஷயமாகும். சுவாசிப்பதை இரண்டு நிலைகளாகச் சொல்லலாம். ஒன்று நுரையீரலுக்குச் சென்ற பிராணவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களிலுள்ள கரிமிலவாயு காற்றால் வெளியேற்றப்படுகிறது. இரண்டு இரத்தக் குழாய்களில் உள்ள பிராணவாயு செல்களுக்குக் கொடுக்கப்பட்டு செல்களில் உள்ள கரிமிலவாயு இரத்தக் குழாய்களால் பெறப்படுகிறது. இப்படி இரண்டு நிலைகளில் வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.

நாம் சுவாசிக்கும் போது மூக்கில் நுழையும் காற்றிலுள்ள தூசுகள் மூக்கின் உள் உள்ள முடிகளாலும் ஈரப்பதமுள்ள மியூகஸ் பரப்பாலும் தடுக்கப்பட்டு தொண்டைப் பகுதிக்குக் காற்று செல்கிறது . அங்கிருந்து குரல்வளைப் பகுதியைத் திறந்து கொண்டு மூச்சுக் குழலுக்குச் சென்று, அங்கிருந்து சிறிய மூச்சுக் குழலையும், நுண்ணிய மூச்சுக் குழலையும் தாண்டி காற்றறைகளுக்கு வந்து சேர்கிறது. இங்கு வைத்துதான் பிராணவாயு நிறைந்த மூச்சுக் காற்றும் இரத்தத்தில் உள்ள கரிமில வாயு நிறைந்த காற்றும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. நுண்ணிய காற்றறைகளும், நுண்ணிய மூச்சுக் காற்றுக் குழாய்களும், நுண்ணிய இரத்தக் குழாய்களும் நிறைந்த தொகுதியே நுரையீரல் ஆகும். இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 5 லிட்டர் காற்று. இது மார்பின் இடப்பக்கமும், வலப்பக்கமும் இரு பாகங்களாக அமைந்துள்ளன. உயிர் மூச்சுக் காற்றுப் பரிவர்த்தனை நுரையீரலில் உள்ள நுண்ணிய காற்றறைகளில் நடைபெறுவதால் இது ஒரு முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது.


செல்களில் உள்ள கரிமிலவாயு நிறைந்த காற்று அசுத்த இரத்தக் குழாய்களால்(சிரை) கவரப்பட்டு இதயம் செல்கிறது. அங்கிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. அங்குள்ள காற்றறைகளில் கரிமிலவாயு நிறைந்த காற்று இரத்தக் குழாய்களால் தள்ளப்பட்டு, காற்றறைகளில் உள்ள சுவாசத்தின் மூலம் வந்த காற்று இரத்தக்குழாய்களால் பரிவர்த்தனை செய்யப்பட்டு இதயம் வழியாக செல்களுக்கு அனுப்பப்படுகிறது. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு, நைட்ரஜன் 79%, பிராணவாயு 20 %, கரிமிலவாயு 0.04%, ஆகும். வெளிவிடும் காற்றிலுள்ள வாயுக்களின் அளவு நைட்ரஜன் 79%, பிராணவாயு 16%, கரிமிலவாயு 4.04% ஆகும். பிராணாயாமத்தின் பொழுது காற்று நுரையீரலில் அதிக நேரம் நிறுத்தப்படுவதால் காற்றிலுள்ள ஆக்சிஜன் அதிக அளவு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் செல்களுக்கு அதிக ஆக்சிஜன் என்கிற பிராணவாயு கொடுக்கப்பட்டு சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாகக் கிடைக்கும் ஆக்சிஜனால் கிடைக்கும் பிராண சக்தி தசைகளில் உள்ள மயோகுளோபினால் சேர்த்து வைக்கப்படுகிறது. சாதாரணமாக சுவாசிக்கும் போது நுரையீரலில் உள்ள 3000 காற்றறைகள் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் பிராணாயாமத்தின் போது 6000 காற்றறைகள் செயல்படுகின்றன. எனவே இரு மடங்கு சக்தி கிடைப்பதோடு, அதிகமான பிராணசக்தி சேமிக்கப்பட்டு ஒரு நிலையில் ஓஜஸாக மாறி மூலாதாரத்தில் சேர்கிறது. இதனால் ஆயுளும் அதிகரிக்கிறது.

பிராணாயாமமும், தியானமும் செய்து வந்தால் உணர்வுகள் கட்டுக்குள் வரும். இதனால் நரம்புகளும் சுரப்பிகளுக்கு எந்தவிதமானத் தாக்கத்தையும் கொடுப்பதில்லை. செல்களுக்குத் தேவையான பிராணவாயுவை பிராணாயாமம் மூலம் பெறும் தன்மையையும் உடல் அடைவதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. நிமிடத்துக்கு 15 முறை சுவாசிக்கும் மனிதன் 10 நிமிடம் பிராணாயாமம் செய்யும் போது ஒரு பங்கு நேரம் உள் இழுத்தல், நாலு பங்கு நேரம் உள்ளே வைத்தல், இரண்டு பங்கு நேரம் வெளியே விடுதல் என்று சுவாசம் செய்யும் போது 140 சுவாசங்களை மிச்சப்படுத்துகிறான். காலை, மாலை இரு வேளையும் செய்தால் 280 சுவாசம் ஒருநாளில் மிச்சமாகிறது. மேலும் சுவாசத்தை ஆழமாக இழுத்து மெதுவாக விடும் பழக்கத்தைப் பெற்றுவிடுவதால் நிமிடத்திற்கு மூன்று சுவாசம் மிச்சமானால் கூட, தூங்கும் நேரம் போக மற்ற நேரங்களில் எவ்வளவு சுவாசம் மிச்சமாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அந்த அளவு ஆயுள் அதிகரிக்கும் என்பதோடு மட்டுமல்ல ஆரோக்யமும் மேம்படுகிறது. தியானமோ மூளையின் இருபாகங்களையும் சமநிலைப்படுத்தி, மனதையும் ஒருநிலைப்படுத்தி, உடலில் மின்காந்த அதிர்வுகளை இன்ப அதிர்வுகளாக உண்டு பண்ணி, நாடி நரம்புகளை சீரடையச் செய்து, மன அழுத்தத்தையும் போக்கி நோயற்ற வாழ்வைத் தருவதோடு மெய்யறிவு பெறவும் வழிவகை செய்கிறது.


கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென்வயிறு
நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுவதில்லை
நில்லென்று சொல்லியல்லோ நிலைநிறுத்த வல்லார்க்குக்
கொல்லென்று வந்த எமன் என்கண்ணம்மா
குடியோடிப் போகானோ ! - அழுகணி சித்தர்.

என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பிராணன் அடங்கினால் மனம் அடங்கும், பிராணனின் சலனம் மனதின் சலனம், பிராணன் வசமானால் மனம் வசமாகும் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அப்படியானால் எதற்காக அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆஸனம் என்கிற மூன்று நிலைகளை பிராணாயாமத்திற்கு முன்னால் கடைபிடிக்கச் சொல்கிறார்கள் ? நேரடியாகப் பிராணாயாமம் அதற்கு அடுத்து பிரத்யாகாரம் , தாரணை, தியானம், சமாதி என்று போய் விடலாமே ?
ஒருவன் தன் ஆன்மிக வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியே இயமம், நியமம் என்பனவாம், வேறொன்றும் இல்லை. இந்த ஒழுக்க நெறிகளையும், ஆஸனம் என்கிற உடலை உறுதி செய்கின்ற பயிற்சியையும் மேற்கொண்டவர்கள் மட்டுமே தியானத்தில் நிலைத்து நின்று சமாதி நிலையை அடைய முடியும். மற்றவர்கள் மனதையும், உடலையும் வலுவாக்கி உலகாய வாழ்வை திறம்பட நடத்திக் கொள்ளலாம். ஏனென்றால், எவ்வளவு சக்தியை மேம்படுத்திக் கொண்டாலும், உலகாய வாழ்வைப் பொறுத்த மட்டில் சக்தி விரையமாவதைத் தடுக்க முடியாது. இந்த உலகாய வாழ்விலும் இல்லற ஒழுக்கம் என்ற நெறியைத் தவறாமல் கடைபிடித்து மேம்பாடு அடைந்தவர்களும் உண்டு. எனினும் இரண்டிற்கும் பலனடையும் காலம் வித்தியாசப்படும். என்றாலும் பிராணனைக் கையிலெடுத்தவர்கள் காலதாமதமானாலும் உண்மையை உணரும் வழிக்கு தானே வருவார்கள். இது சத்தியம்.
அன்று அவர்கள் இயம, நியமங்களைக் கடைபிடிக்க வேண்டியதிராது. ஏனென்றால் அனுபவம் அவர்களை வழி நடத்தி ஒழுங்கு முறையைத் திணித்திருக்கும்.

ஒரு ஆரோக்யமான சூழலில் வாழும், திடகாத்திரமான மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிப்பான். ஆனால் நாமெல்லாம் இருபது முறைக்கும் அதிகமாகவே சுவாசிக்கிறோம் என்பது அதிர்ச்சிதரும் புள்ளி விபரம். ஆரோக்யமாக நல்ல மனிதனுக்குக் கூட ஒரு நாளைக்கு 21600 சுவாசங்கள் இயங்கினாலும், 7400 சுவாசங்கள் பாழாகும் என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. எஞ்சிய 14500 சுவாசங்களே உள்ளே புகுந்து உடலுக்கு நன்மை செய்யும் என்று கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.

தற்போது மனிதர்களின் ஆயுள் குறைந்துள்ளது எதனால் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியே விடும் பழக்கம் நமக்கு இல்லை. கட்டாயம் அதை நாம் பழகிக் கொள்வதோடு நம் குழந்தைகளுக்கும் இளம் வயதிலேயே அதைப் பழகித்தர வேண்டும்
எனெனில் எங்கும் நீக்கற நிறைந்திருக்கும் பிராண சக்தியே மானிட உடலுக்குள் உயிராய் விளங்குகிறது. அதை நாம் உணவு, நீர் மற்றும் வாயுவிலிருந்துப் பெற்றுக் கொள்கிறோம். எனினும் சுவாசம் மூலமாகவே நாம் அதிகம் பெறுகிறோம். அதிகாலையில் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று சொல்வதன் காரணம் கூட அதில் உள்ள பிராண சக்தி எந்தத் தடையுமில்லாமல் கிடைக்கும் என்பதால்தான். மனித சக்திக்கு ஆதாரமாய்த் திகழும் பிராணனே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிராணன் உடலின் தொழிலாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத்தில் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து, சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பு நீரை சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும் எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது. எவர் ஒருவர் உடலில் பிராணசக்தி குறைவில்லாமல் உள்ளதோ, அவர் முகத்தில் வனப்பும், உடலில் வலிமையும் மிகுந்து காணப்படும்.

நாம் சுவாசிப்பது மூச்சுவிடுவது என்பது நமது உயிரின் வடிவம். அதிலிருந்து எழும் பிராணசக்தி அதன் சூக்கும வடிவம். எனவேதான் உயிர் மூச்சு உள்ளவரை பிராணன் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. பிராணன் நம் உறுப்புகள் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பே கருவிலேயே உதயமாகிவிடுகிறது. பரம ஆத்மாவிலிருந்து உண்டாகும் பிராணன் ஜீவாத்மாவிடம் பரவி நிற்கின்றது. ஆத்மாவின் நிழல் போன்றது பிராணன் என்று சொல்வார்கள். ஆகவேதான் பிராணன் நம் மனதையும், புலன்களையும் இயக்கும் சக்தி பெற்றுள்ளது. பிராணனை முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பயன்படுத்தினால் நெருப்பினால் உலோகம் தூய்மையடைவது போல ஜீவாத்மாவின் கரும வினைகளும் தொலைந்து ஜீவன் தூய்மையடையும். உடம்பிலும், இந்திரியங்களிலும் உள்ள அசுத்தங்கள் யாவும் நீங்கி அவைகளும் தூய்மையடையும். மனதை அழிவிலிருந்துக் காத்து காயசித்தியைத் தரும்.

பகவானைப் பற்றி நினைப்பதுண்டா நீங்கள்


மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான்.
"என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே… கோவிலுக்குப் போகலையா…’ என்று கேட்டால், "அப்படியா… இன்னிக்கு பிரதோஷமா… எங்கே சார் நேரமிருக்கு… இங்கேயே வேலை சரியா இருக்கு…’ என்று பதில் சொல்லி, "டிவி’ பார்க்க உட்கார்ந்து விடுகிறார்.
ஆனால், பகவான், "என்னை வழிபடு, என்னை தியானம் செய். என் கோவிலுக்கு வா…’ என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார். "நான் உன்னை விடமாட் டேன்…’ என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார்.
நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் கிறோம். நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம். பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும். எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற.
வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகி@றாம். அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கி@றாம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை. நோயாளியை குணப்படுத்துவ@த முக்கியமாக கருதுகி@றாம்.
இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்@ளார் முக்கியம். இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கி@றாம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது.
"அப்பாடா…இன்னிக்கு ஒரே அலைச்சல்… களைப்பாயிருக்கிறது…’ என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகி@றாம். இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை.
ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான்.
என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான்.
சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதி@ல@ய. கவனம் முழுவதும் இருக்கிறது.
ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது!
உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக் கிறோம். நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா? இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும். ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

ஆசை

ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?
அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம்.

‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.
அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது.

‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.
கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

முக்தி நிலை

ஒரு பக்திமானிடம் கேட்டால் கலியுகத்தில் பக்தியே சிறந்த உபாயம். மேன்மையடைவதற்கு அதை விட வேறு வழி கிடையாது என்பார். கர்ம யோகியும் அதையே சொல்வார். தான் பின்பற்றும் வழியே சிறந்தது என்று பிடிவாதமாகச் சொல்வதோடு மற்றவரை குறைத்துப் பேசுவார். யோக மார்க்கத்தை கடை பிடிக்கும் யோகியோ பக்தி மார்கத்தையும், கர்ம யோகத்தையும், வேத, ஆகம நெறி முறைகளையும் கிண்டல் செய்வார். 

காலகாலமாக இவர்களுக்கிடையே உள்ள சச்சரவு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அஷ்டாங்க யோகம், தந்திர யோகம் போன்றவைகளைச் செய்து வெற்றி அடைந்தவர்களோ அல்லது யாகங்கள், ஹோமங்கள் செய்கிறவர்களோ மட்டும்தான் மீட்சியை அடைய முடியும், மற்றவர்களெல்லாம் முக்தி அடையவே முடியாது என்றால், உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை விரல்விட்டு எண்ணும் அளவிற்கே முக்தி அடைந்தவர்கள் எண்ணிக்கை இருக்கும். 
அதாவது குறைவாக இருக்கும். ஆனால் அதை அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது. யோகமும் ஒரு உபாயம். 

ஆகவேதான் ஞானிகள் மோட்ச சாதனங்களை பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ யோகம், ஞான யோகம் என்றெல்லாம் பிரித்து பாகுபடுத்தி சொல்லி வைத்தனர். யோகம் என்பது இணைப்பது எனப் பொருள்படும். அதாவது ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைக்கும் சாதனைகளை யோகம் என்று குறிப்பிடுகிறோம். 

மனிதனுடைய இயல்புக்கு ஏற்ற யோகங்களை அனுசரிப்பதிலும் பேதங்கள் உண்டு. தமோ குணம் அதிகமுள்ளவர்களுக்கு கர்ம யோகம் சிறந்தது.

ரஜோ குணம் உள்ளவர்களுக்கு பக்தி யோகம் சிறந்தது.

சத்துவ குணம் நிரம்பப் பெற்றவர்களே ஞான யோகத்தை அனுசரிப்பதற்குத் தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள்.

அந்தந்த யோக நிலைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேன்மையடைந்தவர்கள் பலர் வாழ்ந்து முக்தி நிலை ஏய்தியிருக்கிறார்கள்.
தமோ குணம் அதிகமுள்ளவர்களுடைய ஆற்றல் அவர்களிடத்தில் வெளிப்படாமல் உள்ளே மறைந்து கிடக்கும். அந்த ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு அல்லது மேலும் வலிமையுடையதாக்கி செயல்படுத்த அவர்கள் உடலாலும், மனதாலும் செயல் புரிய வேண்டும். இந்த உடலைக் கொண்டு, பலன் மீது பற்று இல்லாமல் கடவுளுக்காக பணி செய்வதையே கர்ம யோகம் என்பர். அந்த கர்ம யோகிக்கு மனதில் பரோபகார சிந்தனையும், கடவுள் சிந்தனையும் மேலோங்கி வரும் போது அவர் இராஜயோகி ஆகிவிடுவார்.

தமோகுணம் மிகுந்துள்ள மனதைப் பண்படுத்த கர்ம யோகமும், இராஜ யோகமும் சிறந்த வழிகளாகத் திகழ்கின்றன. இதனால் உடலிலும், உள்ளத்திலும் ஆற்றல் பெருகுவதோடு, சித்தம் சுத்தியடைகிறது. இரஜோ குணம் உள்ள மனிதன் உலக வாழ்வில் ஆசைகளுக்கு அடிமையாகி விடுகிறான். அவனுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விடுகிறான். மனதை ஐம்பொறிகள் வாயிலாக புற உலகில் செலுத்துவதால் ஆசை உருவெடுக்கிறது. அதே மனதை இறைவன்பாற் செலுத்தும் பக்தி யோகத்தை கடைபிடிக்கும் போது அவனுடைய ஆசை, மலங்கள் எல்லாம் நீங்கி விடுகின்றன. மனதின் இச்சா வசக்தியானது பக்தியினால் உயிர்கள் அனைத்தையும் நேசிக்கின்ற அன்பாக மாறிவிடுகிறது. பக்தி யோகம் பேரன்பை வளர்ப்பதாகும்.

சத்துவ குணம் ஓங்கப் பெற்றவர்களுக்கு இயல்பாகவே புலனடக்கம் அமைந்துவிடுகிறது. பரஞானம் அவனுக்கு தெளிவாகவே விளங்குகிறது. அறநெறி இன்னது என்பதை இயல்பாகவே அவன் உணர்ந்துவிடுகிறான். மெய்பொருளில் மனதை நிலைபெறச் செய்து தியானிப்பது அவனுக்கு எளிதாக இருக்கிறது. இறைவனை உணர்வதற்குறிய பேரறிவை ஞான யோகம் இவர்களுக்கு வழங்குகிறது. அம்பிகையை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைப்பார்கள். நான்கு யோகங்களையும் ஒருங்கிணைந்து கடைபிடிப்பவர்கள் அம்பிகையின் சிறந்த உபாசகனாவான். அதாவது தமோ குணத்தையும், இரஜோ குணத்தையும் கர்ம யோகம், இராஜ யோகம், பக்தி யோகங்களை கடைபிடித்து சத்துவ குணமாக மாற்றி ஞான யோகத்தில் திளைப்பவன் அம்பிகையான வாலையின் அருளுக்கு பாத்தியப்பட்டவனாகிறான்.

அவர்களுடைய மனதில் பேரன்பு, பேராற்றல், பேரறிவு நிரம்பி வழியும். கர்ம யோகமும், இராஜ யோகமும் ஆற்றலை வளர்க்கும். பக்தி யோகம் அன்பை வளர்க்கும். ஞான யோகம் அறிவை வளர்க்கும். இதெல்லாம் சரி சாதாரண மனிதனுக்கு முக்தியே வாய்க்காதா ? வாய்க்கும். அவர்கள் நிலையில் அவர்கள் வாழ்வினை செம்மையாக ஒழுக்கமுடனும், நேர்மையாகவும் கடைபிடித்து வாழ்பவன் தானாகவே முக்தி அடைவான்.

ஒரு மரத்தில் பூவிலிருந்துதான் காயும், பழமும் வருகின்றன. பூவாக இருக்கும் போது வாசனைக்கும், காயாக இருக்கும் போது சுவைக்கும், பழமாக மாறும் போது இனிமைக்கும் உரியனவாக விளங்குகின்றன. இந்த இனிப்பு வருவதற்கு முன் எப்படி இருந்தது ? பூவாக இருக்கும் போது கசப்பாகவும், பிஞ்சாக இருக்கும் போது துவர்ப்பாகவும், காயாக இருக்கும் போது புளிப்பாகவும் இருந்தது. பிறகுதான் இனிப்பு வந்தது. இந்த இனிப்புதான் சாந்தம். இதுதான் சத்துவ குணம். இந்த இனிப்பு வந்தால் எல்லா பற்றும் போய்விடுகிறது. பற்றற்ற ஞானப் பழத்தின் மீது அனைவருக்கும் ஈர்ப்பு வந்து விடுகிறது. புளிப்பு இருக்கும் வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காயிலும் நீர் வரும், காம்பிலும் நீர்வரும். அதாவது மரமும் காயை விட விரும்புவதில்லை, காயும் மரத்தை விட்டு பிரிய விரும்புவதில்லை. அதனால் தான் நீர்வருகிறது. ஆனால் இனிப்பு வந்து விட்டாலோ பழம் தன்னாலேயே இற்று கீழே விழுந்து விடுகிறது. பற்றற்றுப் போய்விடுவதால் நீரும் வராது. அதாவது அழாமல் ஆனந்தமாய் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் இனிமை உடைய ஒவ்வொருவனும் இப்படியே சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டிருப்பான். பழம் ஆவதற்கு முன் எப்படி கசப்பும், துவர்ப்பும், புளிப்பும் வேண்டியதிருந்ததோ, அது போல மனிதனுக்கும் காமம், வேகம், துடிப்பு எல்லாம் வேண்டியதிருக்கிறது. அதாவது கசப்பு இருக்க வேண்டிய நேரம் கசப்பும், அதற்கு பின் துவர்ப்பும், புளிப்பும் தேவைப்படுகிறது.

ஆனால் அந்த நிலையோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு பிஞ்சும் பழமாகிக் கொண்டே இருப்பது போல, நாமும் மேலும் மேலும் இனிமையான அன்பை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி வாழ்ந்து வந்தால் நாமாகப் போய் முக்தியைத் தேட வேண்டாம். தானாகவே பழமாகி முக்தியடைவோம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ, அந்தக் காலத்தில் அப்படி இருந்தால் தானாகவே மோட்சம் என்கிற முக்தி நிலை வந்து விடும்.

எல்லா இடங்களிலும் இறைவன் …

சிறியதோ பெரியதோ எல்லாமே மிகச் சிறிய அணுவின் கூட்டம்தான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே பரம்பொருளின் வெளிப்பாடுகளே.
பரம்பொருள் கடல்; படைப்புகள் அலைகள்.

அலைகள் தோன்றும்; மறையும்.கடல் நிரந்தரமாக இருக்கும்.

அலைகளில்பேரலை,சிற்றலை என்பது எப்படி அபத்தமோ, அது போலத்தான் மனிதர்களில் பெரியவர், சிறியவர் என்பதும்.

தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் நீர்தான். மறைந்த பிறகும் நீர்தான்.
நீரில் பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை.

தோன்றுவதற்கு முன் பேரலையும் சிற்றலையும் ஒன்றாகத்தான் இருந்தன. மறைந்த பிறகும் ஒன்றாகத்தான் இருக்கும்.

இதில் பெருமை என்ன? 
சிறுமை என்ன?

இந்த உண்மையைஅறிவது ஞானம்.

எல்லா இடங்களிலும் இறைவன் …

மதவாதி

மதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. ‘மதவாதி’ என்று ஒருவனை இன்று சொல்கிறோம் என்றால் மோசமான ஆள் என்று சொல்கிறோம் என்று ஆகிவிட்டது. 

அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா மதங்களிலும் மதவாதிகளிடம் லேபிள் மட்டும்தான் இருக்கிறது. உள்ளே சரக்கே இல்லை. மதம் படித்திருக்கிறார்களா என்றால் இல்லை மதம் பிடித்திருக்கிறார்கள்.

சமயங்கள் அத்தனையும் அடிப்படையான உண்மையாக ஒன்றைத்தான் சொல்கின்றன. உண்மையே இறைவன் என்றால் நாத்திகம் வந்திருக்காது. 

இறைவன் உண்மை என்றான் பிரச்சனை வந்துவிட்டது. உண்மை ஒன்றல்ல பார்வையற்றவர்கள் பார்த்த யானை போல உண்மை பலவாக இருக்கிறது. இருப்பது எதுவோ அதுதான் சத்தியம். இறைவனை ஒருவன் நம்புகிறான் என்று சொன்னால், 

அவனால்தான் எல்லா உயிர்களும் படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறான் என்று சொன்னால் பிற உயிர்களுக்கு எப்படி அவனால் தீமை இழைக்க முடியும்?

இறைவனை எந்த ஞானியும் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியாது. 
ஏனென்றால் மனித மூளையின் செயல்பாட்டுக்கு ஓர் எல்லை உண்டு. 

வானவில்லில் ஏழு நிறம் என்கிறோம். ஏழுநிறம்தானா? 
அல்ட்ரா வயலட், இன்ஃபரா ரெட் என அது விரிவடைகிறது. 
 பனிமலை நீரின் மிதக்கிற போது ஒரு முனை தெரியுமே அதுமாதிரியே இறைவனை தெரிந்து வைத்திருப்பது. பௌதீகத்தை கண்டறிவதே இப்படி என்றால் அபௌதீகத்தை எப்படி கண்டறிவான்?

மூன்று பொன் மொழிகள்


அழகிய பறவை ஒன்றை விலைக்கு வாங்கி அதைக் கூண்டில் வைத்து ஒரு வியாபாரி வளர்த்தான்.ஒரு நாள் அப்பறவை அவனிடம்,தன்னை விடுதலை செய்தால், வாழ்வை வளமாக்கும் மூன்று பொன்மொழிகள் சொல்வதாக கூறியதன் பேரில் வியாபாரி அதை விடுவிக்க ஒப்புக் கொண்டான்.

வியாபாரியின் கையிலிருந்து ஒரு பொன்மொழியையும் அவன் வீட்டுக் கூரையில் அமர்ந்து இரண்டாவது பொன்மொழியையும் தோட்டத்தில் உள்ள மரக் கிளையில் அமர்ந்து மூன்றாவது பொன்மொழியையும் கூறுவதாகப் பறவை கூறியது.

வியாபாரி அதன் படி கிளியை விடுவித்து தன கையில் வைத்துக் கொண்டான்.பறவை''உன் வாழ்வில் எதையாவது இழக்க நேர்ந்தால்,அது உன் உயிருக்கு சமமானதாக இருந்தாலும் அதைப் பற்றி வருந்தாதே.''என்றது.

திருப்தியுற்ற வியாபாரி பறவையைக் கையிலிருந்து விட அது கூரையில் அமர்ந்து சொன்னது,''ஆதாரமில்லாத எந்த ஒன்றையும்,உன்னுடைய கண்களைக் கொண்டு நீயே பார்க்காத வரை நம்பி விடாதே.''

அடுத்து வியாபாரி பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு உயர்ந்த மரக்கிளையில் அமர்ந்து கொண்டு கூறியது,''முட்டாள் வியாபாரியே,என் வயிற்றில் இரண்டு விலை உயர்ந்த ரத்தினங்கள் உள்ளன.என்னைக் கொன்று என் வயிற்றிலிருந்து அவற்றை எடுத்திருக்கலாம்.''

இதைக் கேட்டவுடன் வியாபாரி ஆத்திரம் கொண்டான்.வருந்தினான்.ஆனாலும் பிடிக்க முடியாதே என்ற கவலையுடன் மூன்றாவது பொன் மொழியையாவது கூறும்படி பறவையிடம் சொன்னான்.பறவை நகைத்துக் கொண்டே,''என்னப்பா,நான் சொன்ன முதல் முதல் இரண்டு பொன் மொழிகளே உனக்கு புரியாத போது,மூன்றாவது எதற்கு?''என்று கேட்டது.'என்ன சொன்னாய்?எனக்கா புரியவில்லை?'என்று கோபமுடன் கேட்டான் வியாபாரி.

''ஆமாம்,இழந்து போனதற்காக வருந்தாதே என்றேன்.நீயோ இரண்டு ரத்தினக் கற்களுக்காக எரிச்சல் படுகிறாய்.கண்ணால் காணாததை நம்பாதே என்றேன்,நீயோ என் வயிற்றில் இரண்டு ரத்தினங்கள் இருப்பதாகக் கூறியதை நம்பினாய்.முட்டாளே!என் வயிற்றில் இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தால் என்னால் உயிரோடு இருக்க முடியுமா?''என்று கூறிப் பறந்து சென்றது அப்பறவை.

ஞாயிறு, 11 மே, 2014

சும்மா இருப்பது சுலபமா


ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்.

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .
உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்
ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "
அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

சிவாலய சம்ரதாயங்கள்


உஷத்கால பூஜை :

சிவாச்சாரியார், சூர்ய உதயத்துக்குக் குறைந்தது 5 நாழிகைகள் (2 மணி நேரம்) முன்பு எழுந்து வாக்கினால் தோத்திரமும் மனத்தினால் இறைவனது தியானமும் செய்துகொண்டு, இரண்டு நாழிகைக்குள் காலைக்கடன்களை முடித்துக்கொள்ளவேண்டும். பின்னர், ஸ்நானம் செய்து, வெண்மையான வேஷ்டி அங்கவஸ்த்ரம் உடுத்தி, விபூதி, ருத்ராக்ஷம் போன்ற சிவச் சின்னங்களை அணிந்து, ஆசமனம், அனுஷ்டானங்களை செய்துவிட்டு, ஆலயம் செல்ல வேண்டும். கோயில் வாயிலில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எதிர்ப்படும் நந்தி தேவரையும் துவாரபாலகர்களையும் ப்ரார்த்தித்து அவர்தம் அனுமதி வேண்டி, திருக்கோவில் வளாகம் புக வேண்டும். அங்கே சகளீகரணம் செய்து, சாமான்யார்க்யம் கூட்டி, அந்த அர்க்ய நீரினால் தன் மீதும் புறத்தே உள்ள பொருள்கள் மீதும் தெளித்து, அனைத்தையும் தூய்மையாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஆத்மார்த்த பூஜையாக கரந்யாஸம், ப்ராணாயாமம் செய்து, பூதசுத்தி, அந்தர்யாகம், சிவோகம்பாவனை ஆகிய மூன்று கிரியைகளைச் செய்ய வேண்டும். இவற்றால் அருச்சகர் சிவபூஜைக்குத் தகுதி வாய்ந்தவர் ஆகிறார். பின்னர், திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் இருந்து பைரவர் ஸந்நிதியின் திறவுகோலைப் பெற்று, பைரவரின் நடையைத் திறக்க வேண்டும். ÷க்ஷத்திரபாலகரை (பைரவரை) பூஜித்து, பொறி நைவேத்யம் செய்து, முதல் நாள் இரவு ஒப்புவிக்கப்பட்டு இதுகாறும் அவர் வயம் இருக்கும் பள்ளியறைத் திறவுகோல் மற்றும் முத்திரா தண்டம் (சாவிக்கொத்து) ஆகியவற்றை அங்குச் முத்திரையால் எடுக்க வேண்டும். பின்னர், அனைத்து ஸந்நிதிகளையும் திறக்கச் செய்து அவற்றின் ஸாந்நித்யம் கலைக்கப்படாமல் வாத்தியங்கள், தோத்திரப் பாடல்கள் இசைக்க, பள்ளியறை சென்று, வெளியே இருந்து திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் இசைக்க வேண்டும். பின்னர் துவார பூஜை செய்து, கதவுகளைத் திறப்பதற்குக் காலகாலனது அனுமதியை வேண்டி, கதவில் திறவுகோல் நுழைவதற்குரிய துவாரத்தை பிந்து வடிவினாகத் தியானித்து, பின் அருச்சித்து, திறவுகோலை நாத வடிவினதாகத் தியானித்து பிந்துவினுள் செலுத்தி, சக்தி-சிவ மந்திரங்களை உச்சரித்த வண்ணம் பள்ளியறைக் கதவினைத் திறந்திடல் வேண்டும். பவித்ரமான அர்க்ய நீரினால் உட்புறம் முழுதும் தெளித்து, நிர்மால்யம் களைந்து, பாவனையால் ஸ்நானம் முதலானவை செய்வித்து, ஆசமநீயம் ஆகியவற்றை முறைப்படி அளித்து, அவரை வெளியே எழுந்தருளும் வண்ணம் வேண்டி நிற்றல் வேண்டும். பின்னர் சக்தியை (மனோன்மணியை) அங்கேயே விடுத்து, இறைவனை (பாதுகையை) மட்டும் சிவிகையில் (பல்லக்கில்) எழுந்தருளுச் செய்து, வலமாக எடுத்து வந்து, கருவறை சேர்ப்பிக்க வேண்டும். அங்கு மூல மூர்த்திக்கு முன் பூவைக் கையில் எடுத்துக் கொண்டு, மூலலிங்கத்தில் சேர்த்திடல் வேண்டும். பிறகு உஷத்கால பூஜையாக ஸ்தான சுத்தி செய்து, பூதேவியை வழிபட்டு, திரவ்ய சுத்தி செய்து, கணபதியை பூஜிக்க வேண்டும். பிறகு, ஸ்வாமி, ஸோமாஸ்கந்தர், மகேச்வராதிகள், அம்பாள் ஆகியோரை விதிப்படி பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில் சூர்யோதயம் ஆக வேண்டும்.


தீர்த்த ஸங்க்ரஹணம், காலசந்தி பூஜை :

சிவபெருமான் அர்த்தயாம பூஜையின் முடிவில், சிவிகை மீதமர்ந்து கீதம், நர்த்தனம், வாத்ய கோஷங்களுடன் சயனாலயத்திற்குச் சென்றதும், பரமசிவனுடைய ஜடையிலுள்ள கங்கை, அங்கு பள்ளி அறையிலுள்ள மனோன்மணியம்மையை வணங்கி, வெகு வேகமாக அங்கிருந்து நீங்குவாள். மீண்டும் கங்கா தேவியை பரமசிவனுடைய ஜடாமகுடத்தில் சேர்க்கும் பொருட்டு செய்யப்படும் கிரியையே கங்காஹரணம் அல்லது தீர்த்த ஸங்க்ரஹணம் எனப்படும். தன்னை நன்றாகச் சுத்தி செய்து கொண்ட சிவாச்சாரியார், சுவர்ணம் முதலிய ஏதாவதொரு குடத்தில் நதியிலிருந்து நீரை நிரப்பி, மாவிலை தேங்காய் முதலியவற்றால் அலங்கரித்து, பரிசாரகரின் தலை மீது அந்தக் குடத்தை ஏற்றி, வாத்ய கோஷங்களுடன் உபசாரங்களுடனும் எடுத்து வந்து, சிவலிங்கத்தின்மீது விசர்ஜனம் செய்ய வேண்டும். இதன் பிறகே காலசந்தி பூஜை தொடங்கும். முதலில் சூர்ய பூஜையும், கணேச பூஜையும். பின்னர், பஞ்சகவ்யம், ஸ்நபன திரவியங்கள் செய்து வைத்துக்கொண்டு, த்வாரபூஜை, வ்ருஷபதேவர் பூஜை, வாஸ்துபூஜை, லிங்கசுத்தி ஆகியன செய்து, போகாங்க பூஜை செய்து, நைவேத்யம் முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். பின்னர் தேவி பூஜையும், பரிவார பூஜையும், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள். நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.


உச்சிகால பூஜை :

விக்நேச்வர பூஜை, புண்ணியாகம் (புண்ணியாஹவாசனம்) பூதசுத்தி, அந்தர்யஜனம், தியானம், ஸ்தானசுத்தி, விசேஷார்க்யம், த்ரவ்யசோதனை, மந்திரசோதனை, சிவாகம்பாவனை ஆகிய பூர்வாங்கக் கிரியைகள் முதலில், பின்னர், ஸ்நபன பூஜை செய்து, துவாரபாலகரை வணங்கி, உட்புகுந்து, ஆதாரசக்தி முதல் மானசாபிஷேகம் வரை முறையாக மூலவரை அர்ச்சிக்க வேண்டும். பிறகு அபிஷேகம், அலங்காரம், ஆவரண பூஜை, பிறகு, தூப தீப நைவேத்யங்கள். பிறகு நடேசர், சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை, சில திருக்கோவில் சம்ப்ரதாயங்களில், தொடர்ந்து நித்யாக்னி கார்யம், ஸ்ரீபலி, நித்யோத்ஸவ நிகழ்ச்சிகள் உண்டு. பூஜையின் நிறைவாக, சிவ நிர்மால்யத்தைச் சிவசண்டேச்வரரிடம் சமர்ப்பித்தல்.


சாயங்காலத்தில் செய்யப்படும் பூஜை :

ஸூர்யன் சாயும் காலத்தில் செய்யப்படுவது சாயுங்கால அல்லது சாயங்கால பூஜை. இதுவே நித்திய ப்ரதோஷ பூஜை எனவும் கூறப்படும். (நித்திய-நைமித்திக ப்ரதோஷ பூஜை என்பது க்ருஷ்ண-சுக்ல பக்ஷ த்ரயோதசி நாட்களில் சாயுங்காலத்தில் செய்யப்படும் சிறப்ப பூஜையாகும்). முதலில் கணேசருக்கும், நடராஜருக்கும் பூஜை. பின்னர் மூல லிங்கத்திற்கு தூப தீப நைவேத்யம் உள்ளிட்ட பூஜை. பிறகு சோமாஸ்கந்தர் முதலிய மூர்த்திகளுக்கும், தேவிக்கும் பூஜை.
இரண்டாங்கால பூஜை (இரவு முதல் யாம மகாசந்தி பூஜை) :
முதலில் விக்நேச்வர பூஜை செய்து, பின்னர் ஸ்வாமி ஸந்நிதியில் துவார பூஜை; சிவோகம்பாவனை செய்து, ஐந்து ஆவரணங்களுடன் இறைவனைப் பூஜித்து, வ்யோமவ்யாபி மந்திரத்தினால் எண்ணெய் முதல் ஸ்நபனம் வரை அபிஷேகம்; அலங்காரம்; தூப தீப நைவேத்யம், ராஜோபசாரம்; தேவி பூஜை; பரிவாரங்களுக்கு பூஜை; தொடர்ந்து நித்ய அக்கினி காரியம், நித்யோத்ஸவம், ஸ்ரீபலி; நிறைவாக சண்டிகேச்வரர் பூஜை.


இரவு அர்த்தயாம பூஜை:

த்வாரபூஜை கிடையாது; ஸ்நாபனம்; மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம்; பஞ்சாவரண பூஜை; அப்பம் ஈறாஜ நைவேத்யம்; தேவி பூஜை; போகசக்தி பூஜை; பின் ஸ்வாமி ஆலயத்தில் சந்த்ரசேகரர், ஸோமாஸ்கந்தர், நடேசர், மூல மூர்த்தி இப்படி ஒடுக்கக் கிரமமாய் பூஜித்துத் திரையிட்டு, பாதுகாராதன பிம்பத்தில் மூர்த்தியை ரஹஸ்யமாய் சம்யோஜித்து பூஜித்து, சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல். பின் அம்பாள் ஆலயத்தில், திரையிட்டு, அங்குள்ள சயனாலய பிம்பத்தில் அல்லது பீடத்ரிகோணத்தில் சக்தியை ரஹஸ்ய பூஜையுடன் சம்யோஜித்து ஆராதனையை முடித்தல். பின்னர் சயனாலயத்தில் சுவாமி பாதுகையில் இடப்பக்கத்தில் சக்தி பிம்பத்தை எழுந்தருளச் செய்து, பள்ளியறை பூஜை; பால், பால் பாயஸம், வடை நைவேத்யம்; வாசனைப் பொருட்களுடன் கூடிய தாம்பூலம் சமர்ப்பணம்; திரை இட்டு, இறைவனைப் பள்ளி கொண்டருளும்படி தோத்திரப் பாடல்கள் இசைத்தல்; பள்ளியறை நடைஅடைத்தல். சண்டேச்வரர் பூஜை; பிறகு, . ÷க்ஷத்ரபாலகருக்கு (பைரவருக்கு) பூஜை செய்து, அவரிடம் முத்திரா தண்டத்தை (திருக்கோவில் சாவிக்கொத்து) ஒப்படைத்தல். பின்னர் பைரவர் ஸந்நிதி நடை அடைத்து அந்தச் சாவியை திருக்கோயில் வளாகம் காவல் காக்கும் பொறுப்புள்ளவரிடம் அளித்தல்.

பூஜா கால அளவு :

ஒவ்வொரு காலத்திலும் செய்யப்படும் பூஜைக்கு ஆகக்கூடிய நேரம் : அபிஷேகத்திற்கு - 2 நாழிகை; அர்ச்சனைக்கு - 1 நாழிகை; நைவேத்யத்திற்கு - அரை நாழிகை; நித்யாக்னி கார்யம் - அரை நாழிகை; நித்யோத்ஸவம் - அரை நாழிகை; நர்த்தனம் முதலிய கலா உபசாரங்கள் - 1 நாழிகை.

நித்யாக்கினி காரியம் :

இதற்காக ஸ்வாமி ஸந்நிதியில் குண்டம் அமைக்கப்பட்டிருக்கும். நிரீக்ஷணம், ப்ரோக்ஷணம், தாடனம், அப்யுக்ஷணம் ஆகிய நான்கு வகை கிரியைகளைச் செய்து புனிதமாக்கப்பெற்ற நீரினால் குண்டத்தை ப்ரோக்ஷணம் செய்து கலாமயமாகக் கற்பித்து, எண்வகை மலர்களால் அருச்சித்து, அவிச்சின்னமான (தடைப்படாது இருந்து வருகின்ற) அக்நியைத் தியானித்து, பரிதிகளையும் விஷ்டரங்களையும் (குண்டத்தில் படிகள்) உரிய இடத்தில் வைத்து, பரிதிகளில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈமானன் ஆகியோரையும். விஷ்டரங்களில் இந்திரன் முதலிய திக்பாலகர்களையும் ஆவாஹனம் செய்து அருச்சித்து, அர்க்யம் கொடுத்து, சிருக்சுருவ ஸம்ஸ்காரங்களையும் ஆஜ்ய (நெய்) ஸமஸ்காரங்களையும் செய்தல் வேண்டும். கனன்று எழும் அக்கினியைச் சிவாக்கினியாகப் பாவித்து, அதன் நடுவேயுள்ள இதயத் தாமரை மலரில் சிவபிரானை ஆவரணங்களுடன் அருச்சித்து, மூலமந்திரம் மற்றும் பஞ்சப்ரஹ்ம மந்திரங்களால் ஆகுதி செய்து பூர்ணாஹுதி செய்திடல் வேண்டும். பின்னர், பரிதி விஷ்டரங்களில் அன்னத்தால் பலி; அங்கிருந்து புஷ்பங்களை அஞ்சலி முத்திரையால் எடுத்து, மூலவரிடம் கொண்டு சென்று, க்ஷமாபராத மந்திரம் கூறி, உற்பவ முத்திரையால் வணங்கி வரத ஹஸ்தத்தில் மலர்களை சமர்ப்பித்தல் வேண்டும்.

ஸ்ரீபலி :

தினமும் மூன்று வேளைகள் இல்லாவிடினும், காலை - மாலை இரு வேளைகளிலுமாவது (அல்லது மிகக் குறைந்தபக்ஷமாக ஒரு வேளையாவது) நித்திய பலி இடுதல் வேண்டும். நாமாவளியின் இறுதியில் நம: என்று கூறி அருச்சித்தல் முறை; அவ்வாறே, நாமாவளியின் இறுதியில் ஸ்வாஹா என்று கூறி ஸ்ரீபலி இடுவது முறை. மற்றொருவர் பலி நாயகரைச் சுமந்து வர, பரிசாரகர் அன்னம் எடுத்து வர, சிவாச்சாரியார் ஒரு கையில் அர்க்ய பாத்திர நீரும், மற்றொன்றில் மணியும் எடுத்துச் செல்வார். இறைவன் ஸந்நிதி முன்னுள்ள துவாரபாலகரிடமிருந்து தொடங்கி, பலி பீடங்கள், திருநந்திதேவர் ப்ரதிஷ்டையாகியுள்ள இடங்கள், த்வஜஸ்தம்பதத்தின் அருகிலுள்ள பத்ரலிங்கம் என்றழைக்கப்பெறும் மஹாபலிபீடம். திக் பாலகர்கள். அனைத்துப் பரிவார தெய்வங்களுக்குமான பலிபீடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பூமியில் நீர் தெளித்துப் புனிதமாக்கி, பரிசாரகர் தரும் சுத்த அன்ன உருண்டைகளை வைத்து சிவாச்சாரியார் பலி இடுவதே ஸ்ரீபலி.

சனி, 10 மே, 2014

உதயணரின் ஒன்பது வாதங்கள் :

உதயணரின் ஒன்பது வாதங்கள் :

உதயணர் தம்முடைய நியாய குசுமாஞ்சலி என்னும் நூலில் கடவுளின் இருப்புத்தன்மையை நிரூபிக்க புகழ்பெற்ற ஒன்பது வாதங்களை முன்வைத்துள்ளார்!! அவற்றைப் பற்றிக் கீழே சுருக்கமாக விளக்க விழைகிறேன்!!

கடவுளை அறிதலின் முடிவு நிலை என்று வர்ணிக்கும் உதயணர் இந்தப் பிரபஞ்சம் என்பது ஒரு செயலின் விளைவாக உண்டாகிய ஒரு பயன் (EFFECT) என்கிறார்!! அவ்வாறு ஒரு பயன் உருவாகும் போது அந்த செயலை உருவாக்கிய ஒரு காரணி (CAUSE) என்ற ஒன்றும் இருந்தே தீரும் என்று சொல்லும் அவர் அதுவே கடவுள் (ISHVARA) என்றும் குறிப்பிடுகிறார்!! இது சம்பந்தமான அவருடைய ஒன்பது வாதங்கள் இதோ!!


1. பயன் நிலை (EFFECT)


பயன் நிலை என்பது ஒரு காரணியால்தான் இயலும் !! பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்பது அணுக்களாலும் அந்த அணுக்களின் இணைப்பாலுமே உருவாகிறது!! உலகின் இயங்கும் காரணி என்பது எல்லாப் பருப்பொருட்களைப் (MATTER) பற்றிய முழுமையான அறிவால்தான் நிகழ இயலும் !! அவ்வாறான முழுமையான அறிவு என்பது எந்த மனிதனுக்கும் இல்லை என்பதால் அந்த அறிவுநிலையே கடவுளாகிறது ! உருவாக்கப்பட்ட ஒன்று இருந்தால் உருவாக்கியவன் என ஒருவன் இருந்தே தீர வேண்டும் !!!


2. அணுச்சேர்க்கை (COMBINATION)

அணுக்கள் என்பவை சுயநகர்வு இல்லாதவை !! அவை தங்கள் சுற்றுப்பாதையிலேயே இயங்குபவை!! இந்த அணுக்கள் எல்லாம் ஏதோ ஒரு ஒழுங்குமுறையில் இணைந்துதான் பருப்பொருளை உருவாக்குகின்றன!! தானாக எந்த நகர்வும் இல்லாத அணுக்கள் எல்லாம் தன்னுடைய சொந்த முயற்சியில் இணைய நேர்ந்தால் அதில் எந்த ஒழுங்குத்தன்மையும் இல்லாது போயிருக்கும் !! அவை ஒரு ஒழுங்கு முறையுடன் இணைந்தது இன்னொரு வெளி இயக்கத்தால்தான்!! அதுவே கடவுள் !!

3. ஆதாரம் (SUPPORT)

பிரபஞ்சத்தில் அமைந்துள்ள உலகங்களை எல்லாம் தாங்கி நிற்கும் சக்தி ஏதோ ஒன்று கண்டிப்பாக இருக்கவே செய்கிறது!! அவ்வாறு ஒன்று இல்லையென்றால் பிரபஞ்சம் என்பது ஒன்று சேர்ந்த இயக்கமாக (INTEGRATED) இருக்க சாத்தியமில்லை!! அந்த சக்தியே கடவுள் !!

4, சொற்கள் (WORD)

ஒரு சொல்லைக் கேட்கும் போது அது எதைப் பற்றிக் குறிக்கிறது என்பதே அறிவின் ஆரம்ப நிலை (ORIGIN OF KNOWLEDGE). அவ்வாறான அறிவு எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மொழி பேசும் மனிதருக்கும் தத்தமது மொழியில் உண்டாகிறது!! இந்த அறிவின் ஆரம்ப நிலை என்பது பிரபஞ்ச முழுமைக்கும் ஒன்றாக உள்ளதால் அது மனிதனன்றி பிரபஞ்சத்தைக் கடந்த சக்தியின் தாக்கத்தால்தான் இயலும்!! அதுவே கடவுள் என்கிற சக்தி!!

5.நம்பிக்கை (FAITH)

வேதங்கள் எல்லாமே கடந்த காலம் , நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்கிற மூன்றைப் பற்றியும் உரைக்கின்றன !! அவ்வாறு உரைக்கும் சக்தி மனிதனின் அறிவுக்கு இல்லை!! அதனால் வேதங்கள் என்பதை மனிதனை விட மேம்பட்ட சக்தி ஒன்றே படைத்திருக்க இயலும்!! அந்த சக்தியே கடவுள்!!
 
6.வேதவசனங்கள் (SCRIPTURES)

வேதங்களின் உட்பொருள் எல்லாம் கடவுட்தன்மையைப் பற்றியே விளக்குபவையாக உள்ளன!! மனிதனுக்குத் தன்னைப் படைத்தது யார் என்று தெரியாத சூழலில் தான் மரணம் அடைவது எதனால் என்பதும் அறியாத சூழலில் வேத வசனங்கள் எல்லாம் மனிதன் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் பருப் பொருட்கள் அனைத்தையும் படைத்துக், காத்து, அழிப்பவன் இறைவனே என்று சொல்கின்றன!! இதனால் இறைவன் என்னும் சக்தி மெய்ப்பிக்கப் படுகிறது!!

7.அறியுணர்ச்சி (PERCEP)

ஒரு சில நீதிகள் சம்பந்தமான விதிகள் பிரபஞ்ச முழுமைக்கும் பொதுவிதிகளாகவே என்றைக்குமே இருக்கின்றன!! இவை பிரபஞ்சம் முழுதும் பகிரங்க விதிகளாகவே உள்ளன !! இவ்விதிகள் மனிதனால் உருவாக்கப் பட்டவை அல்ல என்னும் போது அவை கடவுளால் உண்டானவையே என்பதும் தெளிவாகிறது!!

8.எண் அறிதல் (SPECIALITY OF NUMBERS)

பிரபஞ்சத்தில் ஒன்று என்கிற எண் மட்டும்தான் இயற்கையானதாக உள்ளது!! மீதி எண்கள் அனைத்தும் உணர்வின் காரணமாகவே உண்டானதாகும்!! உதாரணமாக பிரபஞ்சம் ஒன்று, மனிதன் ஒருவன், அணு ஒன்று இப்படி... ஆனால் ஈரணு என்பது இரண்டு அணுக்கள் சேர்ந்த நிலை என்பதை உணர நேர்வது ஒன்றுக்கும் மேற்பட்ட எண்கள் பற்றிய அறிவு மூலம் உண்டாகிறது!! அவ்வாறான உயரறிவு மனிதனுக்கு இயற்கையில் உருவாகவில்லை!! அந்த அறிவை அவனுக்கு அளித்தது அவனினும் மேம்பட்ட ஒரு சக்தியே ஆகும்!!

9.அறியாநிலை (UNFORESEEN)

மனிதன் தன் செயல்களாலேயே பலன்களை அடைகிறான்!! அவனுடைய சிறப்பும் இழிவும் அவன் செயல்களாலேயே உருவாகிறது!! செயல்களை மட்டும்தான் மனிதன் செய்கிறானே தவிர அந்த செயலின் பலனாக சிறப்பையும் இழிவையும் அவனுக்குக் கொண்டு சேர்ப்பது பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவான ஒரு சக்தியாலேயே நடக்கிறது!! அந்த சக்தி எதுவென்பது மனித அறிவால் அறிய முடியாததாகவே இருக்கிறது!! அந்த சக்தியே கடவுள்!!
இன்றைய கடவுள் தத்துவ நூல்களின் ஆதாரப் பொருட்கள் எல்லாமே உதயணரின் தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டவை என்பதில் எந்த சந்தேகமுமில்லை!!
‪#‎TREASURES_OF_HINDUISM‬

இதிகாசக் கிளைக் கதை

பத்மபுரம் கங்கை நதியின் தென்கரையில் அமைந்திருந்த வளமான சிற்றூர். கங்கை நீரால் அங்கிருந்த மரங்களும் செடிகொடிகளும் தளதளவென வளர்ந்திருந்தன. பச்சைப் பசேல் என்று பூமித்தாயின் மணிமகுடத்தில் பதித்த மரகதக் கல்போல் ஜொலித்தது அவ்வூர். அங்கு எல்லோருமே பரம சௌக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. அதனால் யாரையும் யாரும் கடிந்துகொள்ளவில்லை; அங்கே பகை இல்லை, வன்மம் இல்லை, யாருடைய சிந்தனையிலும் எள்ளளவும் ஹிம்சை இல்லை. எல்லாமே மன நிறைவாக அமைந்துவிட்டதால், அடிப்படைத் தேவைகள் சுலபமாக பூர்த்தியாகிவிட்டதால், பலர் தத்துவ விசாரங்களில் ஈடுபட்டார்கள்.

‘மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆதாரமான தர்மம் என்ன, எதை அனுசரித்து நடந்தால் விரைவில் முக்தி பெறலாம், இறந்த பின் ஆன் மா எங்கு செல்கிறது?’ என்பன போன்ற பல அடிப்படைக் கேள்விகளைப் பற்றி அவர்கள் சதா ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கிராமத்திற்கு யாரேனும் சான்றோர் வந்தால் அவர்களிடமும் இத்தகைய கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற முயல்வார்கள். அந்த ஊரில் வாழ்ந்த சான்றோர்களிலேயே தலையாய ஒருவர் இருந்தார். அவரது ஞானம்தான் அந்த ஊரின் பெருமை எனக் கருதப்பட்டதால் எல்லோரும் அவரை ஊர்ப் பெயராலேயே பத்மர் என அழைத்தார்கள்.

பத்மர் மெய்ஞ்ஞானி. என்றாலும் அவருக்கும் எல்லா சந்தேகங்களும் தீர்ந்தபாடில்லை. ‘ஒரே ஒரு தர்மத்தை மட்டும் விடாமல் அனுசரித்து அதன்
மூலம் இறைவனுடன் கலக்க வேண்டுமானால் எந்த தர்மத்தை அனுசரிக்க வேண்டும்?’ என்று எப்போதும் எண்ண மிட்டு, விடை தெரியாமல் தவித்து வந்தார் அவர்.

அன்று அதிகாலை சூரியதேவன் கிழக்குத் திசையில் வழக்கம்போல் பளீரென உதித்தான். நதிக்கரை சென்ற பத்மர், செக்கச் செவேல் எனப் பழுத்த
மாதுளைபோல் தோன்றிய சூரியனை மனமொன்றி வழிபட்டார். ‘என் வினாவிற்கு விடை தேடி அலைகிறேனே சூரிய பகவானே! இன்றேனும் அதற்கு ஒரு விடை கிட்டலாகாதா?’ என உளமாரப் பிரார்த்தித்தார். பின் யோசனையோடு தன் இல்லம் நோக்கி நடக்கலானார்.

இப்போது சிவப்பு நிறம் மாறி வெள்ளி நிறம் பெற்று விண்ணில் உயரத் தொடங்கிய சூரியன் அவரைக் கனிவோடு பார்த்தான். ‘இன்றே உன் கேள் விக்கு விடை கிட்டாவிட்டாலும் விடை கிடைப்பதற்கான மார்க்கம் உனக்கு இன்று தெரியவரும். அதன் பொருட்டு உனக்கு அறிவுரை சொல்ல ஒரு வரை நான் இன்று அனுப்பப் போகிறேன்!’ என மனதிற்குள் எண்ணி நகைத்துக் கொண்டான். இந்த உத்தம ஞானியான பத்மர் ஒருநாள் தன்னிடத்தில் வரவேண்டியவர் அல்லவா என்ற எண்ணத்தில் சூரியன் முகத்தில் ஒளிக்கீற்றாய் ஒரு புன் முறுவலும் பிறந்தது. இவ்விதம் எண்ணமிட்டவாறே, தனது ஏழு குதிரை பூட்டிய தேரின் கயிற்றை முன்னிருந்து இழுத்து, தனது பயணத்திற்கு உதவும் மாபெரும் ராஜநாகம் ஒன்றைக் கனிவோடு பார்த்தான் கதிரவன்.

பத்மர் இல்லத்திற்குச் சென்றபோது, வாயிலிலேயே தழைத்த தாடியோடு முனிவர் தோற்றத்தில் ஓர் ஆச்சரியம் அவருக்காகக் காத்திருந்தது. அவரு டைய முகப்பொலிவு பலநூறு ஆண்டுகள் செய்த தவத்தின் பலனாய் விளைந்ததுபோல் தோன்றியது. வெளியூரிலிருந்து வருவதாகச் சொன்ன அவரை பிரமிப்போடு வணங்கிய பத்மர், தன் இல்லத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். கனிவர்க்கங்கள், பால், தேன் போன்ற முனிவர்களுக்கேற்ற உண வைக் கனிவோடு அளித்து உபசரித்தார். அவர் பசியாறிய பின்னர் அவரைப் பணிந்து தன் சந்தேகத்தைக் கேட்கத் தொடங்கினார். ‘‘சுவாமி! ஒரே ஒரு தர்மத்தை மட்டுமே விடாமல் அனுசரித்து அதன்மூலம் இறைவனுடன் கலக்க வேண்டுமானால், அப்படி எந்த தர்மத்தை அனுசரிக்க வேண்டும்.’’

முனிவர் இந்த வித்தியாசமான கேள்வியைக் கேட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார். ஒரே ஒரு தர்மத்தை அனுசரித்து எப்படி முக்தி அடைவது?
ஜபதபங்கள், யக்ஞங்கள், கிரகஸ்தாசிரமத்திற்குரிய விருந்தோம்பல் போன்ற தர்மங்கள், பெற்றோரைப் பேணுதல், நாவால் யாரையும் காயப்படுத்தாதிருத்தல் என்று மனிதர்கள் அனுசரிக்க வேண்டிய எத்தனையோ நெறிகள் உண்டே?

அவ்விதமிருக்க ஒரே ஒரு தர்மத்தின் மூலம் இறைவனை அடைய வேண்டும் என விரும்பினால் எந்த தர்மத்தைப் பரிந்துரைப்பது? சிந்தித்த முனிவர் பத்மரிடம் பேசலானார். ‘‘பத்மரே! உங்களது நுணுக்கமான கேள்விக்கு எனக்கு விடை தெரியாவிட்டாலும் யாருக்கு அந்த விடை தெரியும் என்று நான் அறிவேன். கோமதி நதிதீரம் செல்லுங்கள்

அங்கே நைமிசாரண்ய வனம் இருக்கிறது. அந்த வனத்தில் பத்மநாபன் என்ற மாபெரும் நாகம் வாழ்ந்து வருகிறது. அந்த நாகத்தைப் போல் தர்மங்கள் தெரிந்தவர்கள் இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. அந்த ராஜநாகம் எந்த தர்ம நெறியிலிருந்தும் வழுவியதில்லை. உங்கள் சந்தேகம் தீர இது ஒன்றுதான் வழி’’. முனிவர் சொன்னதைக் கேட்ட பத்மர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

முனிவரை வணங்கி வழியனுப்பிய அவர், அன்றே ஞானத் தேடலோடு கோமதி நதிக்கரையை நோக்கி நடந்தார். பற்பல சிரமங்களைத் தாண்டி அவர் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், ஞானத்திலெல்லாம் மிகச் சிறந்த ஞானத்தைப் பெற முடியுமானால் அதன்முன் இந்த சிரமங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றுதான் அவர் மனம் எண்ணியது.

வழிகேட்டு வழிகேட்டு இறுதியாக வனத்தில் பத்மநாப நாகத்தின் இல்லத்தை அடைந்து விட்டார் அவர். நாகபத்தினி அன்போடு அவரை வரவேற்று உபசரித்தாள். ஒரு நாகமேயானாலும் அது காட்டிய அன்பும் உபசரிப்பும் பத்மரை வியப்பில் ஆழ்த்தின. தான் பத்மநாப நாகத்தைத் தேடி வந்திருப்ப தாகவும் அந்த நாகத்திடம் தர்மநெறி பற்றி சந்தேகம் கேட்கவிருப்பதாகவும் பத்மநாப நாகத்தைச் சந்திக்க இயலுமா என்றும் நாக பத்தினியிடம் விசாரித்தார் பத்மர். ‘‘என் கணவரான பத்மநாப நாகம் சூரியனின் தேரை இழுக்கச் சென்றிருக்கிறாரே? அவர் வர ஏழெட்டு நாட்கள் ஆகுமே?’’ என வருத்தத்தோடு சொன்னாள் நாகபத்தினி. ‘‘எத்தனை நாட்களானாலும் அந்த நாகத்தைச் சந்திக்காமல் நான் விடைபெற இயலாது.

இங்கேயே சற்றுத் தொலைவில் நான் உணவுண்ணாமலும் ஏதொன்றும் பேசாமலும் தவத்தில் ஆழ்ந்திருப்பேன். பத்மநாப நாகம் வந்து என் சந்தேகம் தீரும் வரை நான் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்!’’ என்று உறுதிபடக் கூறிய பத்மர் சற்றுத் தொலைவில், மேட்டுப்பாங்கான பகுதி ஒன்றில் இருந்த பாறையில் சம்மணமிட்டு அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். நாகபத்தினி அவரையே மரியாதையோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மர் உண்மையிலேயே ஞானத் தேடலுடன்தான் வந்திருக்கிறார் என்பதை அவ ளால் புரிந்துகொள்ள முடிந்தது. மாபெரும் முனிவர்களெல்லாம் சந்தேகம் கேட்டுத் தன் கணவனைத் தேடி வருவது குறித்து அவள் முகத்தில் பெருமிதம் எழுந்தது.

சுற்றிலுமிருந்த நாகங்களை அழைத்து அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் வேறு எந்த ஆபத்தும் வராமல் அவரைக் காவல் காக்கும்படியும் கட்டளையிட்டாள். பின் கணவன் வரவுக்காகக் காத்திருக்கலானாள். பத்மநாப நாகம் தன் இருப்பிடம் திரும்பியது. தன் பத்தினியிடம் தான் இல்லாதபோது நடந்த விஷயங்களையும் எல்லாச் செயல்களும் தர்ம நெறி தவறாமல் நடந்து கொண்டிருக்கின்றனவா என்றும் விசாரித்தது. நாகபத்தினி பெருமூச்சோடு நடந்தவற்றைச் சொன்னாள்:

‘‘சுவாமி! தங்களைச் சந்திக்க வந்திருக்கும் பத்மர் வேத வேதாந்தங்களைக் கரைத்துக் குடித்தவராகத் தோன்றுகிறார்.
அவரே தங்களிடம் சந்தேகம் கேட்க வந்திருக்கிறாரே என்ற பெருமிதம் என் மனதில் எழுந்தது உண்மை. ஆனால், அவர் தாங்கள் வரும்வரை ஏதொன்றும் உண்ணாமலும் ஏதொன்றும் பேசாமலும் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். நம் வீட்டுக்கு வந்த விருந்தாளியான அவர் பட்டினியாக இருக்கிறாரே என்று என் மனம் வருந்துகிறது. ஆகையால் தாங்கள் உடனே போய் அவரைச் சந்தியுங்கள்!’’

பத்மநாப நாகம் சற்று யோசித்தது. பின் ‘‘எனக்கு அவரால் ஆகவேண்டிய செயல் ஒன்றுமில்லை. பின் நான் ஏன் அவரைப் போய்ச் சந்திக்க வேண்டும்?’’ என்று கேட்டது. நாகபத்தினி சொன்னாள்: ‘‘பிரபோ! நம் இல்லம் தேடி வந்தவர் அவர். தங்களிடம் சந்தேகத் தெளிவு பெறுவதன் பொருட்டு காத்திருக்கிறார்.
முதலில் நம்மைத் தேடி வந்தவர் அவர்தான் என்பதையும் இப்போது உங்களுக்காகவே உண்ணாமல் அசையாமல் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் எண்ணிப் பாருங்கள். இப்போது அவரைத் தாங்கள் சென்று சந்திப்பதுதான் முறை. நாம் யாரையேனும் அனுப்பி அவரை வரச்சொன்னாலும் அவர் வந்துவிடக்கூடும்; ஆனால், அது நமக்கு அழகல்ல.’’நாகபத்தினியின் பேச்சில் உள்ள நியாயங்களைக் கேட்டு மகிழ்ந்த பத்மநாப நாகம், ''அதிதி உண்ணாமல் இருக்கும்போது நான் மட்டும் உண்ணுவது முறையல்ல. நான் அவரைச் சந்தித்தபின் வந்து உணவுண்பேன்!'' என்று சொல்லி பத்மரைச் சந்திப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றது.
அந்த மாபெரும் ராஜநாகம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் முன்பாக, அதைப் பார்த்தவுடனேயே அதுதான் பத்மநாப நாகம் என்பதை பத்மர் புரிந்துகொண்டு விட்டார். அவரை வணங்கிய நாகம் அவருக்கு தர்மநெறி குறித்து என்ன சந்தேகம் என்று பரிவோடு கேட்டது. பத்மர் தாமும் அந்த நாகத்தை வணங்கினார்.

பின் கேட்டார்: ''என் சந்தேகம் இருக்கட்டும். சூரிய ரதத்தை இழுப்பதற்காகத் தாங்கள் சென்றிருப்பதாய் நாக பத்தினி என்னிடம் தெரிவித்தார். அவ்விதம் சூரிய ரதத்தை இழுத்து வருகையில் நீங்கள் என்ன ஆச்சரியங்களைக் கண்டீர்கள்?’’ ‘‘எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆச்சரியமல்லாத எதுவும் சூரியனில் இல்லை. எத்தனையோ முனிபுங்கவர்கள் சூரியனின் கிரணங்களில் வசிக்கிறார்கள்.

அவர்களே சூரியனின் ஒளியை மிகுதிப்படுத்துகிறார்கள். வெயிலும் மழையும் சூரியனால்தானே ஏற்படுகின்றன? எல்லாவற்றையும் படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருள் சூரியனின் மையத்திலேயே உறைகிறது. பலமுறை நான் சூரிய ரதத்தை இழுக்கும் பணியில் ஈடுபட்டாலும் இந்த முறை ஆச்சரியகரமான ஒரு சம்பவத்தைக் கண்டேன். பூமியிலிருந்து ஒரு பெரியவர் சூரியனை நோக்கி வந்தார். ஒளிவீசும் தேகத்தோடு இருந்த அவர் இன்னொரு சூரியனோ என்னும் வகையில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே வந்ததும் சூரிய பகவான் அவரைக் கைவாகு கொடுத்துத் தூக்கிவிட்டான்.

தேரிலேறிக் கொண்டார் அவர். பின் சூரியனின் மிக அருகே சென்று, சடாரென்று சூரியனிலேயே கலந்து சூரியனோடு ஒன்றாகிவிட்டார்’’.
''வியப்பாக இருக்கிறதே? யார் அவர்?'' என்று பத்மர் கண்ணகல ஆச்சரியத்தோடு விசாரித்தார். நாகம் மரியாதை தொனிக்கும் பார்வையோடு பதில் சொல்லலாயிற்று: ''பத்மரே! முதலில் அந்த மனிதருக்கு ஏன் அத்தனை பெருமை என்று எனக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ள வேண்டி நான் சூரிய பகவானிடமே, தங்களில் கலந்த அவர் யார், எதனால் அவருக்கு இறைச்சக்தியோடு கலக்கக் கூடிய பேறு கிட்டியது என்று விசாரித்தேன்!’’பத்மர் பரபரப்போடு கேட்டார்: ‘‘அதற்கு சூரியபகவான் என்ன பதில் சொன்னார்?’’ ''வாழ்நாள் முழுதும் அகிம்சை என்ற ஒரே ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த பெரியவர் அவர். அந்த ஒரு தர்மத்தை முழுமையாகக் கடைப்பிடித்தால் அதுவே போதும்; அதில் எல்லா தர்மங்களும் அடங்கிவிடுகின்றன.

அதனால்தான் இறைச்சக்தியுடன் கலக்கும் பேறு பெற்றார் என்று சூரிய பகவான் என்னிடம் தெரிவித்தார். இதுதான் நான் கண்ட அதிசயக்காட்சி!’’ என்றது நாகம். இதைக் கேட்ட பத்மரின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்தது. உண்மைதானே? அகிம்சை என்ற ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்தால் அதுவே போதுமே? அடுத்தவர்களைப் பேச்சாலோ செயலாலோ துன்புறுத்தத் தோன்றாதே? அடுத்தவர்களைத் துன்புறுத்தாத நிலை என்பதுதானே இறைநிலை? அப்படிப் பட்டவர் இறைவனோடு இரண்டறக் கலப்பதில் என்ன ஆச்சரியம்? ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பத்மர், ''நான் வருகிறேன்!'' என்று விடைபெற்றார். ''கேட்க வேண்டிய சந்தேகத்தைக் கேட்கவில்லையே?’’ என்றது நாகம்.

''கேளாமலே என் சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டது!'' என்றார் பத்மர். மீண்டும் பத்மபுரம் திரும்பிய பத்மர் வேறு எந்த வேள்வியோ பூஜையோ நிகழ்த்தாமல் அகிம்சை நெறியை மட்டும் விடாது கடைப்பிடித்து வாழ்ந்தார். யாருக்கும் எந்த இம்சையும் தராத அவரது உயர்வான அகிம்சை நெறியைக் கண்ட மக்கள் அவரைப் போற்றினார்கள். ஒருநாள் அவர் காலமானார். அவரது ஆன்மா ஒளியுடல் பெற்று சூரியனை நோக்கிச் சென்றது. அப்போது சூரியனின் தேரை இழுத்துக் கொண்டிருந்த தர்மமே வடிவான பத்மநாப நாகம் அவரை அடையாளம் கண்டு வணங்கியது. அவரும் நாகத்தை வணங்கினார்.
சூரிய பகவான் மலர்ச்சியுடன் அவரைக் கைலாகு கொடுத்துத் தன் தேரில் ஏற்றிக் கொண்டான். தேரில் ஏறிய அவர் சூரியனின் அருகாகச் சென்றார். மறுகணம் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பைப் போல் சூரியனின் மையத்தில் இருந்த அந்தப் பரம்பொருளிலேயே ஐக்கியமாகிக் கரைந்து போனார். மீண்டும் பிறவாத நிலை எய்திப் பரம்பொருளாகவே மாறிவிட்ட பத்மரை எண்ணிப் பத்மநாப நாகம் பெருமிதத்தோடு தலை வணங்கியது. (மகாத்மா காந்தி போற்றிய அகிம்சைக்கான ஆதாரம் மகாபாரத இதிகாசத்திலேயே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த இதிகாசக் கிளைக் கதை.

வெள்ளி, 9 மே, 2014

தர்மசிந்தனை.

உபதேசத்துக்காக விடியகாலை வந்த புத்தர். தனது சீடர்கள் முன்னால் புன்முறுவலோடு அமைதியாக உட்காந்தார். ஒரு தர்மகதையை கூறதொடங்கினார்.

"அந்த மனிதன் நீண்ட பயணத்தை மேற்கொண்டு இருந்தான். போகிறவழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. அங்கே கடந்து செல்ல படகோ பாலமோ இருக்கவில்லை. சிலமரகிளைகளை எடுத்து கட்டுமரம் ஒன்றை தயார் செய்தான். அதை கொண்டு அவன் மறுகரையை அடைந்தான்.
கரையை அடைந்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த கட்டுமரம் எத்தனை உபயோகமாக இருந்தது. நான் ஏன் இந்த கட்டுமரத்தை கொண்டு செல்லகூடாது என்று. அவன் கட்டுமரத்தை தலையில் சுமர்ந்து செல்ல தீர்மானித்தான்."

அத்துடன் கதையை நிறுத்திய புத்த பெருமான் தமது சீடர்களை நோக்கி, ""துறவிகளே.., அந்த மனிதனின் தீர்மானம் சரிதானா.. ?" என்று கேட்டார்.
அவர்கள், "இல்லை பெருமானே..!" என்று பதிலளித்தனர்.
புத்தர் அவர்களின் பதிலில் திருப்தியுற்றவராக,

"ஆம்.., அவன் கட்டுமரத்தை அங்கேயே விட்டு செல்வதுதான் விவேகம். அதுவே தர்மசிந்தனை." என்று தர்மத்தை அவர்களுக்கு போதித்தார்.

உலகில் விரும்பதக்க அத்தியாவசியங்கள் இருக்கலாம். ஆனால் அவை ஆற்றை கடந்தபின் விடவேண்டிய கட்டுமரம் போல்தான். இல்லையெனில் மனதில் சுமைகள் அதிகமாகிபோகும்.

வியாழன், 8 மே, 2014

அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.



தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.

 ‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் – இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி,

ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.
மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.

raas_leela

எங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.

நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!

narada-kund

இந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.

இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?

நன்றி:தமிழ் இந்து

அவன் பொறுப்பில்.



துறவி ஒருநாள் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அங்கே தன் உடைகளைக் கழற்றி தரையில் வைத்துவிட்டு ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். கரையின் மீது எவருடைய ஆடைகளோ இருப்பதைக் கண்டான் அவன். உடனே ஆற்றுப் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவனது கண்ணுக்கு தென்படவில்லை. பக்கவாட்டில் இருந்த கரைகள் அவனை மறைத்திருந்தன.

"அடடா! யாரோ ஒருவர் கவனமில்லாமல் இதனை விட்டுவிட்டு போய்விட்டிருக்கிறார். அவர் வரும் வரை இதனைப் பாதுகாப்போம்!" என்று எண்ணி அங்கேயே ஆடைகளுக்குக் காவலுக்கு நின்றான் அவன்.

ஆற்றில் வெகு நேரம் நீராடிய பின்னர் கரையேறினார். அவர் தன்னுடைய உடைகளை எடுக்க முற்பட்டபோது அங்கே நின்றிருந்த மனிதன் அவரிடம், "பெரியவரே! உடைகளை இப்படி பாதுகாப்பின்றி விட்டுச் செல்லலாமா? எவரேனும் களவாடிச் சென்றிருந்தால் உங்கள் கதி என்ன ஆவது?" என்றான்.

சிரித்தார். "ஓஹோ ! நான் உடைகளை அவன் பொறுப்பில் விட்டுவிட்டுப் போயிருந்தேன். அவன் அந்தப் பொறுப்பை உன்னிடம் கொடுத்துவிட்டான் போலும்..! என்றார் சர்வ சாதாரணமாக.

எல்லா நிகழ்வுகளும் இறைவனின் செயலே என்பது தான் ஞானம். ஓர் பொருள் கிட்டியது என்றால் இது இறைவன் நமக்கு அளித்தது என்று நினைத்து அதனை மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும்.அது தொலைந்தாலோ மறைந்தாலோ இறைவனால் அது எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது என்று கருதுவார்கள் அவர்கள்.

அதனால் தான் ஞானியர் எந்தப் பொருள் பத்திரமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்வதும் இல்லை. எந்தப் பொருள் களவு போனாலும் அதற்காக அவர்கள் வருந்தப்படுவதும் இல்லை.

மாயையே சிவம். சிவமே மாயை. எல்லாம் சிவமயம்.

''மாயா'', எது(யாதொன்று) ஒரு நொடிக்கு முன்பு இருந்தது போல பிறகு இல்லையோ, அது மாயா என்கிற மாயை. ஓயாது மாறிக் கொண்டே இருப்பது மாயை. ஆக இந்தப் பிரபஞ்சமே மாயைதான். இந்த மாயையின் தோற்றங்கள் எல்லாம் இகம் எனப்படும். அதற்கு அப்பால் உள்ள பரந்த வெளி பரம் எனப்படும். கண்ணாடியில் பிம்பம் தோன்றுவது போல இந்த பரம் என்கிற வஸ்துவில் பிரபஞ்சம் தென்படுகிறது. இந்த மாய வெளியைக் கடந்து பரவெளியை அடைவதே வாழ்வின் நோக்கம்.

 மாயா வாதத்தை எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கு அப்பால் என்று பார்க்கிற போது, எதுவும் இல்லை என்கிறவர்களும் உண்டு, அதற்கு அப்பால் பரம்பொருள் இருக்கிறது என்பவர்களும் உண்டு.
 
அப்படியானால் அந்தப் பரம்பொருளை யூகித்து அறிய முடியுமா ? முடியும் என்று உறுதியாகச் சொல்வதே நம் வேதாந்தம்.

நனவு, கனவு, கனவற்ற உறக்கம் இந்த மூன்று நிலைகளுக்கும் போக்கு வரவு உண்டு. ஆகவே இவைகள் மாயாவின் செயல்கள். இவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் பிரக்ஞானமே ப்ரம்மம் ஆகும். இதையே துரியம் என்கிறோம். இதற்கு போக்கு வரவு கிடையாது. இந்த நிலையையும் இரண்டாகச் சொல்வதுண்டு. அதாவது துரியம், துரிய ஆதீதம் என்பார்கள். சுத்த மனதை துரியம் என்றும், அதையும் தாண்டி மனதற்ற நிலை என்கிற போது துரியாதீதம் என்றும் சொல்வார்கள்.

ஐம்பொறிகளைக் கொண்டும், அந்தக்கரணங்களைக் கொண்டும் உணர்வது இகம். பிறகு ஞானக் கண் கொண்டு உணர்வது பரம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியாது. மலங்கள் என்று சொல்கிற இயல்பு இகத்திலேதான் இடம் பெறுகின்றன. பரத்திலோ அவை பரசொரூபமாக மாறி பரத்தோடு கலந்து மேன்மையடைந்து அல்லது தூய்மை அடைந்து விடுகின்றன. உலகையே அழிக்க வந்த ஆலகாலம் சிவனின் ஶ்ரீகண்டமாகி விட்டது. பாம்பின் பல்லில் உள்ள விஷம் அதற்கு அலங்காரம் அல்லது பாதுகாப்பு. ஆனால் அதே விஷம் மற்ற உயிர்களுக்கு மரணத்தை தருவது. ஆக ஓயாது மாயையின் செயல்களால் மாறிமாறி வருகின்ற பிரபஞ்சம் அமிர்தமாகவும், மலங்களாகவும் மாறி மாறி அமைகின்றன.

நமக்கு பசிக்கிறது. எனவே உணவை உண்கிறோம். இந்த உணவு அமிர்தம். அதே உணவு நம் உடலுக்குத் தேவையானதாகவும், தேவையற்ற பகுதியாகவும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த தேவையற்ற பகுதி மலம். அது நம் உடலை விட்டு நீங்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாகி விடும். அமிர்தமாக இருந்த போது உண்ணப்பட்டாலும் பிறகு தேவையற்ற பகுதி மலமாக வெளியேற்றப்படுகிறது. இதைப் போலவே நீரும். பருகும் போது அமிர்தம். பிறகு மூத்திரம் என்கிற மலமாக வெளியற்றப்படுகிறது. அடுத்து காற்று, எள்ளிழுக்கும் போது அமிர்த சொரூபம். கரிமில வாயுவாக வெளியேற்றப்படும் போது மலம். இப்படி பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள வஸ்துக்கள் அமிர்தமாகவும், மலமாகவும் மாறிமாறி அமைந்து வருகின்றன.
இதில் இருந்து பெறப்படும் சூக்குமக் கருத்து என்னவென்றால், உயிர் வாழ்வுக்கு உறுதுணையாக அமைவது அமிர்தம். வாழ்வை அழிக்க வல்லது மலம். அதாவது அமிர்தத்தை ஏற்று மலத்தை விலக்குவதன் வாயிலாக உயிர்கள் துன்பமின்றி வாழ்கின்றன. என்றாலும் முடிவில் மலம் முன்னனியில் நின்று இந்த உடல் வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறது. யோக வாழ்வைப் பொறுத்தவரை நாம் மலங்கள் என்று கருதுவது மாயை, கன்மம், ஆணவம் இந்த மூன்றையுமே. உண்மையில் இந்த மும்மலங்களுமே ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்தி பரமாத்மாவோடு சேர்க்கின்றன. ஏற்கனவே சொன்னது போல இந்த பிரபஞ்சம் மாயை. ஜீவாத்மாவானது பல நூறு பிறவிகள் எடுத்து பரிணமித்து வரும் போது இந்த மாயையானது ஒரு தாய் போல பேணி வருகிறது. இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்தும் நிலையில் மாயையானது மலமாகாது. அதாவது உண்ணும் போது உணவு அமிர்தம். பிறகு மலமாகிறதல்லவா ? அது போல, மாயையானது ஜீவாத்மாவை வளர்த்து பக்குவப்படுத்தி பரமாத்மாவோடு கொண்டு போய் சேர்ப்பிக்கிறது. அப்படி சேர்ப்பிக்கும் தருவாயில்தான் மாயையானது மலம் என்ற நிலையை அடைகிறது.
 
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.
சூரிய வெளிச்சம் வரும் வரைக்கும், விளக்குகள் இருளை நீக்கி பொருள்களை கண்ணுக்கு காட்டும். அது போல மெய்யறிவாகிய ஞானம் அடைகின்ற காலம் வரை மாயை தன் செயல்களால் உயிர்களின் கன்மங்களுக்குத் தக்கவாறு உயிர்களோடு கலந்து நின்று, அவற்றின் அறியாமையை ஓரளவு நீக்கி உதவி செய்யும். உண்மையை உணர்த்த முயலும்.

இறையாற்றலே தன் சக்தியின் வாயிலாக மாயையாக வெளிப்பட்டு அறிவில் பொருளாய், அருவாய், சக்தி ரூபமாய், வியாபகமாய் என்றும் எங்கும் எல்லாவற்றையும் தோற்றியும் ஒடுக்கியும் வருகிறது. எது மாறிக் கொண்டே இருக்கிறதோ அது மாயா என்பது ஒரு பொருள். அது இந்த பிரபஞ்சமே என்பதும் நாம் அறிந்ததே. இந்த பதத்திற்கு மற்றொரு பொருளும் உண்டு. அதாவது மா என்றால் ஒடுங்குதல், யா என்றால் வருதல். எல்லா புறப் பொருள்களும் எங்கு ஒடுங்கியிருந்து மீண்டும் தோன்றுமோ அந்த அடிப்படை வஸ்த்துவே மாயா என்கிற மாயை. ஆக எல்லாம் பரத்தில் தோன்றி பரத்திலே ஒடுங்குவதால் அந்த பரப்ரம்மமே மாயை என்பது வெட்ட வெளிச்சம். இதையே சைவ சமயத்தில் லிங்க தத்துவமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சைவ மரபின்படி மாயை இரண்டு வகைப்படும். ஒன்று சுத்த மாயை, மற்றொன்று அசுத்த மாயை. சுத்த மாயை மலகன்மங்கள் அற்றது. தன்னை உணரும் உயிர்களுக்கு இன்பம் அளிப்பது. பேரறிவையும், பேராற்றலையும் தந்து மறைக்காது உண்மையை காட்டுவது. அசுத்த மாயை மலகன்மங்களோடு கூடி நின்று உயிர்களை மயக்கி அறிவிப்பது. அதனால் இன்பம், துன்பம், மயக்கம் என்ற மூன்று உணர்வுகளையும் உயிர்கள் அனுபவிக்கின்றன.

சுத்த மாயையின் செயலாக சொல்லும் பொருளும் அமைந்துள்ளன. அதாவது சொல் என்றால் உயிர்கள் உலகப் பொருள்களை இது இன்னது என்று வேறுபடுத்தி உணரும் சவிகற்ப உணர்வாகவும், பயக்கும் மொழியாகவும் விளங்குவதாகும். இது எழுத்து, சொல், மந்திரம் என மூன்றாக உள்ளது. பொருள் என்கிற போது கலை என்றும், தத்துவம் என்றும் இரண்டாக அமைகிறது. கலையானது நிவிருத்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை என ஐந்து வகைப்படும். தத்துவமானது நாதம், விந்து, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்று ஐந்து வகைப்படும். இவற்றையே சிவ தத்துவம் என்கிறோம்.

அசுத்த மாயையானது வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம் என் இருவகைப்படும். அதாவது மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் இந்த ஏழும் வித்தியா தத்துவம். ஆன்ம தத்துவங்கள் என்கிற போது பிரகிருதி, புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் நான்கு; மெய், வாக்கு, கண், மூக்கு, செவி என்கிற அறிவுப்பொறிகள் ஐந்து; வாக்கு,பாதம், பாணி, பாயு, உபத்தம் என்கிற தொழிற்பொறிகள் ஐந்து; சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்து; வான், வளி, அனல், புனல், மண் என்ற பூதங்கள் ஐந்து ஆக இருபத்தி நான்கு த த்துவங்களாக விரிகிறது. ஆக சிவ தத்துவங்கள் ஐந்து, வித்தியா தத்துவம் ஏழு, ஆன்ம த த்துவம் இருபத்தி நான்கு மொத்தம் முப்பத்தி ஆறு. இதையே சைவ மரபிபின் ஆகமங்கள் முப்பத்தாறு தத்துவங்களாக்க் குறிப்பிடுகிறார்கள்.

அது போலவே கர்மம். இந்த பிரபஞ்சமே ஒரு கர்ம சொரூபம். கர்மமே ஜீவனின் முன்னேற்றத்திற்கு பெறும் துணையாக இருக்கிறது. உயிர்கள் அனைத்தும் கர்மத்தின் வாயிலாகவே தங்களை திருத்தி அமைத்து வருகின்றன. மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களால் நிகழ்வது எல்லாம் கர்மாவாகும். பக்தி, ஞான விசாரம் இவையெல்லாம் கர்மாவே. முடிவில் ஜீவாத்மாவானது பரமாத்மாவோடு இணைகிற பொழுது கர்மம் இல்லாமல் போய் விடுகிறது. அந்த தருணத்தில்தான் அதற்கு மலம் என்ற பெயர் வருகிறது. இனி ஆணவமலம். அணு என்ற சொல்லின் அடிப்படையில் இந்த ஆணவம் என்ற பெயர் வந்துள்ளது. தன்னை ஒரு நுண்ணிய உயிராக எண்ணிக் கொள்வது ஆணவம். ஜீவன் உண்மையில் அணு அல்லது ஒரு நுண்ணிய உயிராகவே உருவெடுக்கிறது. அது இந்த காலக்கிரமத்தில், ஸ்தாவர ஜங்கமத்தில் பல நூறு பிறவிகள் எடுத்து பரிணமித்து பெருநிலை அடைகிறது. இறுதியில் பரமாத்மாவோடு இணையும் போது ஆணவம் அழிந்து போகிறது. கடலில் விழும் மழைத்துளி எப்படி வடிவம் இழக்கிறதோ அது போல பரமாத்மாவோடு இணையும் போது ஆணவம் மற்றும் இரு மலங்களும் நாமரூபம் அற்று அழிந்து போய்விடுகின்றன. பரத்தினை அடையும் நிலையில் உள்ள ஜீவனுக்கு பிரகிருதியானது மும்மலங்களாக வடிவெடுக்கிறது.
இம்மும்மலங்களையும் அறிந்து அவற்றை துடைத்தெறிந்து விட்டு பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் குறிக்கோள்.

நம் உடம்பை நம்மைச் சுற்றியுள்ள பொருள்களில் இருந்து வரும் ஒளி, ஒலி முதலிய பல வகை அலைகள் இடையறாது வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. அந்த அலைகளின் தாக்கத்தை நம் அறிவுப் பொறிகளின் நரம்பு முனைகளால் உணர்ந்து அவற்றின் பதிவுகளுக்குத் தக்கவாறு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் இது இன்னது என்று அறிந்து கொள்கிறோம். அவ்வாறு நமது அறிவுக்கு விளக்கமாக அமையும் விஷயங்கள் தனு(உடம்பு), கரணம்(மனம் முதலிய அகக் கருவிகள்), புவனம்(நிலம்), போகம்(நிலத்தில் உள்ள நுகர்ச்சிப் பொருள்கள்) என்ற நான்குக்குள் அடங்கும். இந்த நான்கும், இந்த முப்பத்தாறு தத்துவங்களும் மாயேயம்(மாயையின் செயல்கள்) ஆகும். எனவே எல்லாவற்றிற்கும் முடிந்த முதற்காரணமாக உள்ள பொருள் மாயையே ஆகும்.

 மாயையே சிவம். சிவமே மாயை. எல்லாம் சிவமயம்.

 via: சிவனடியார்கள்

சிவனின் இலிங்கத் திருவுருவம் .


சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. சிவம் என்றால் இறைவன். லிங்கம் என்பது அடையாளம். எனவே சிவலிங்கம் என்பது இறைவனை அடைவதற்கு அல்லது தெரிந்து கொள்வதற்கான ஒரு அடையாளச் சின்னம் அல்லது ஒரு குறி ஆகும். லி – லயம், கம் -- தோற்றம். உலகின் அனைத்து பொருட்களும் தோன்றுவதற்கும்,ஒடுங்குவதற்குமான இடம் 

சிவ ஆகமப்படி பீடமானது சக்தியையும் (நாதம்), லிங்கமானது (விந்து) சிவனையும் குறிக்கும் ஒரு சிவசக்தி சொருபமே சிவலிங்கமாகும். பஞ்சாட்சர தத்துவத்தில் சிவவிங்கம்


கீழ்ப்பாகம் -- ந
நடுப்பாகம் -- ம
மேல்ப்பாகம் -- சி
நாதக்குழி -- வ
லிங்கம் -- ய ஆகும். 


இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது. இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். லிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாக அமைந்தது. உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. 


சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.

உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார். அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதனையே சான்றோர்கள் “தெள்ளத் தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர். இதுவே இந்து மதத்தினரின் இறுதி நிலையாகும். இதனையே “தத்துவ மசி” என்று கூறியுள்ளனர். அதாவது நான் அது ஆதல்.

மனதை கட்டுப் படுத்தாவிட்டால்

துறவி ஒருவர் மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்தார்.
ஒரு பெண், தினமும் அருகில் இருந்த பாதையில் அவரை கடந்து செல்வாள்.
இது அவரருக்கு சற்று தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் அந்தப் பெண்ணை பார்க்காமல் இருக்க இரண்டு கண்களையும் துணியால் கட்டிக் கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவளின் கொலுசு சத்தம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.

மறுநாள், அவர் இரண்டு காதுகளையும் சேர்த்து துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் மீண்டும் அவரை கடந்து சென்ற போது அவள் வைத்து இருந்த மல்லிகை பூவின் வாசம் அவரருக்கு தொந்தரவாக இருந்தது.


மறுநாள், அவர் கண், காது மற்றும் மூக்கு என்று அனைத்தையும் துணியால் கட்டிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தார்.
அந்தப் பெண் வரும் நேரம் வந்தது, ஆனால்அன்று அப்பெண் வரவில்லை. இவருக்கு சந்தேகம் வந்தது.


மூக்கின் மேல் கட்டியிருந்த துணியை சற்று கழற்றி விட்டு நுகர்ந்து பார்த்தார்.
மல்லிகை பூ வாசம் வரவில்லை,
பிறகு,
காதுகளை கட்டியிருந்த துணியை எடுத்து விட்டு உன்னிப்பாய் கவனித்தார்.
கொலுசு சத்தமும் கேக்கவில்லை.
உடனே,
கண்களை கட்டியிருந்த துணியையும் எடுத்து விட்டு பார்த்தார்.
அந்த பெண்ணும் வரவில்லை.
ஏன் அந்த பெண் இன்று வரவில்லை..?
(அப்படியே யோசனையில் மூழ்கினார்)
சற்று நேரம் கழித்து தான் அவருக்கே புரிந்தது.


மனதை கட்டுப் படுத்தாவிட்டால்எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பயனில்லை என்று...!!!