புதன், 26 மார்ச், 2014

அதுவாகவே மாறிவிடு.

அவர் ஒரு ஜென் குரு, அவரிடம் ஒருவர் வினாவினார்.
"சுவாமி! தாங்கள் என்ன செய்கிறீர்கள்? "

" எதுவும் செய்யவில்லை" என்று குரு இதற்குத் தயங்காமல் பதிலளித்தார்.
"எதுவும் செய்யவில்லையா? " என்று திகைப்புடன் கேட்டார் வந்தவர்.

"எல்லாமே செய்கிறேன்." குரு இப்போதும் தயங்காமல் பதிலளித்தார். கேள்வி கேட்டவர் மேலும் திகைத்தார்.

ஜென் தத்துவங்களில் பலவற்றில் இது மாதிரி முரண்பாடான பதில்கள் வரும்.ஊன்றிக் கவனித்தால் அதில் உண்மை இழையோடுவதைக் காணலாம்.
எதுவும் செய்யவில்லை. எல்லாமும் செய்கிறேன் என்பதற்கு எதையும் எதிர்பார்த்து நான் எதுவும் செய்யவில்லை. இலக்கின்றி இருக்கிறேன் என்பது பொருள்.

வந்தவர் விடுவதாயில்லை.ஏனெனில் இந்தப் பதில்கள் குழப்பங்கள் குறைந்தபாடில்லை. ஆகவே குழப்பத்துடன் அவர் கேட்டார்.
" எல்லாம் செய்வீர்கள் என்றால் எப்படி, சுவாமி? " என்னென்ன செய்வீர்கள் என்றுதான் சொல்லுங்களேன்?"

" பசி எடுத்தால் சாப்பிடுவேன். தூக்கம் வந்தால் தூங்குவேன்!." என்றார் குரு அமைதியாக.
வந்தவர் திகைப்புடன், " இதில் ஒரு விசேஷமும் இல்லையே!" என்றார்.
" ஆம். அப்படி விசேஷமின்றி இருப்பதுதான் விசேஷம்!" என்றார் குரு சர்வ சாதாரணமாக.

" சாப்பிடுவதையும், தூங்குவதையும் தான் எல்லோரும் செய்கிறார்களே?" வியப்பு மிகுந்திருந்தது வந்தவர் குரலில்.

"உண்மை. ஆனால் யாரும் இதை முழுமையுடன் செய்வதில்லை. நீங்கள் சாப்பிடுவீர்கள். உங்கள் வாய்தான் உணவை உண்ணும். ஆனால், உங்கள் கவனமோ எங்கோ இருக்கும். நீங்கள் தூங்குவீர்கள். உங்கள் மனதில் கவலை, துயரம், எண்ணம், கனவுகள் எனக் கட்டறுந்த குதிரைகள் பல ஓடும். நான் அப்படியல்ல. நான் தூங்கும்போது அங்கே நான் இருக்க மாட்டேன். வெறும் தூக்கம் மட்டுமே அங்கு இருக்கும். நான் உண்ணும் போது அந்த உணவாகவே மாறிவிடுவேன். அது தவிர வேறு அதற்கும் அங்கே இடமில்லை!" தெளிவுபடுத்தினார் குரு.

எதைச் செய்கிறாயோ அதுவாகவே மாறிவிடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக