புதன், 7 மே, 2014

திருவள்ளுவர்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து 
பிறப்பு - இறப்பென்னும் பேதமையை 
நீக்கிய மகான் 
எம்பெருமான் திருவள்ளுவர்.

தினமும் ஒரு குறள் படித்து அதன் கருத்தை ஆராயுங்கள்! ஒருவன் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சகல விசயங்களும் இதில் உள்ளது. திருவள்ளுவர் முதுபெரும் ஞானி அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியது ஆனால் எந்த நூற்றாண்டிலும் வாழும் மனிதர்களுக்கும் இது பொருத்தமாகவே இருக்கிறது.

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது"
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று"
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 
கீழல்லார் கீழல் லவர்" -குறள் 973
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.

"பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து" -குறள் 978
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு 
அணியல்ல மற்றுப் பிற"
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

"சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்"
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

"வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக 
கேள்போல் பகைவர் தொடர்பு" குறள் 882
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து."
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது 
வேண்டாமை வேண்ட வரும்
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக