செவ்வாய், 13 மே, 2014

பட்ட மரத்தின் பாட்டு.

ஒரு சட்டிக்குள்ளே ஒரு விளக்கு. சட்டி உடைகிறது, விளக்கு அணைகிறது. இதுதான், இவ்வளவுதான் வாழ்க்கை. பந்த பாசச் சேற்றிலே செய்த சட்டி. சட்டி சூடேறி கைநழுவி உடைவது போல் காமத்தால் சூடேறிய தேகம் கெடுகிறது.(சட்டி சுட்டதடா கை விட்டதடா. புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா.) ஓட்டைச் சட்டியை வைத்துக் கொண்டு தெருத்தெருவாய் பிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும், ரசமது ஒழுகிய பின்னே வெறும் சோற்றை யார்தான் உண்பார். சுவையில்லாத சோற்றை நாய் கூட ஏற்காதே. காமப் பசியாலும், பழகிய ருசியாலும் காமமும், தாபமும், கோபமும் வெறுப்பும் கொண்டு சக்தியிழந்த வெறும் உடம்பை என்னதான் செய்ய முடியும். எதுக்கும் உதவாத அந்த சடத்தை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டியதுதான். உயிர் பொருள் எதுவோ அதுவே உயர் பொருள் ஆகும். எதைக் கொண்டு இன்னொரு உயிரை உருவாக்குகிறாயோ, அதுவே உனக்குள்ளும் உயிராக இருக்கிறது என்பதை நீ உணரவில்லை என்றால், நீ உருவாக்கிய உயிரே உனக்கு கொள்ளி வைக்கும். சாகக் கிடக்கும் எருமையை ஈ மொய்க்கும், எறும்பு மொய்க்கும், கழுகு கொத்தும், காக்கை உண்ணும
 
இதைத்தான் பட்டினத்தார் பாட்டாக பாடித் தள்ளி விட்டார். இவ்வளவு வெறுப்பாய் பாடியிருக்கிறாரே என்று சிந்தித்துப் பார்த்தால், மனிதன் பருவம், காலம், நேரம் எல்லாம் கருதாது விலங்கினும் கேவலமாக காமத்தீயில் கருகிச் சாகிறானே என்ற ஆதங்கத்தில் பாடியிருக்கிறார் என்பது புரியும். மருந்து, மாத்திரையே உயிர் என்று வாழ்பவர்கள் எல்லாம் உயிரே மருந்து என்பதை உணராமல் போனவரே. உயிர் பலம் இல்லாதவர்கள் தேக பலம் கெடும். தேக பலம் இல்லாதவர்கள் இறைநிலை அடைவது எப்போது ? மனிதன் எந்தக கட்டுப்பாடும் இல்லாமல் மிருகத்தைப் போல வாழ்வதை சுதந்திரம் என்று நினைக்கிறான். அதனால்தான் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தை அடித்துக் கொள்வது போல் காமக் குற்றங்களைச் செய்கிறான். பரிணாமத்தின் முடிவானவன் மனிதன் என்று கருதப்பட்டாலும், மிருகப் பதிவுகள் இன்னும் முற்றிலுமாக அவனிடமிருந்து நீங்கி விடவில்லை.
காமனை எரித்தார், ரதி மன்மதனை எரித்தார் என்றெல்லாம் கதை சொல்வார்கள். உண்மை சூட்சுமத்தை யார்தான் சொல்வர். மூன்றாவது கண்ணான நெற்றிக்கண், அதாவது புருவ மத்தியில் விளங்கும் ஞானக்கண் கொண்டு காமனை எரித்தார். இது கொண்டாடும் விஷயமாகிப் போனதே தவிர, கடைபிடிக்கும் ஒழுக்கம் என்பதை மறைத்து விட்டார்கள் கயவர்கள். எமனையும் நெற்றிக் கண்ணால்தான் எரித்தார். பாசக் கயிற்றை அறுத்து எரிந்தார். சூட்சுமம் புரிகிறதா ?

இவ்வளவும் எதற்காக என்றால்? விஷயம் இருக்கிறது. அதாவது, சுக்கில, சுரோணிதத்தால் ஆனதே இந்தப் பிறவி. ஆணுக்கு 99% சுக்கிலம், 1% சுரோணிதம். பெண்ணுக்கு 99% சுரோணிதம், 1% சுக்கிலம் இதுவே படைப்பின் இரகசியம். இதில் மாறு பாடு உள்ளவர்களுக்கு இயல்பும், தன்மையும் மாறியிருக்கும். ஆண் தன்மை உள்ள பெண்ணாகவோ, பெண் தன்மை கலந்த ஆணாகவோ, அலியாகவோ உள்ளதெல்லாம் இவற்றின் விளையாட்டே. சுக்கில சுரோணிதங்களே உயிர். சுக்கலம் திரவப் பொருளாகவும், சுரோணிதம் திடப் பொருளாகவும் காணப்படும். சுக்கிலத்தை கூட்டிக் கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. சுரோணிதம் அதிகமாக்க ஈஸ்ட்ரோஜன் கொடுக்க வேண்டும். இவற்றின் கூட்டணியே குண்டலினி. ஒரு ராட்சஷிக்கு சுரோணிதத்தைக் கூட்டினால் அவள் குணவதியாவாள். குணம் மாற சரீரமும் மாறும். சரீரம் மாற வேண்டுமென்றால் சுக்கில சுரோணிதத்தைத் தொட்டுவிட வேண்டும். இரண்டையும் சேர்த்துத் தொட்டு விட்டால் அதுவே சாகாக் கலை.
படைத்தவன் எதையும் அழிக்க நினைப்பதில்லை. படைக்கப்பட்டவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதோடு, தன்னோடு சார்ந்துள்ள விஷயங்களையும் அழிக்கிறான். ஊறுகாய் நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு எவ்வளவு அவசியமோ, அது போல உடலைப் பாதுகாக்க நாண்ட நாள் அழியாமல் வைத்திருக்க உயிர் அவசியம். அதற்கு உயிர் பொருள் அவசியம். அது எதுவெனில் சுக்கில, சுரோணிதமே. எந்த ஒரு மனிதனுக்கு சுக்கிலத்தில் பலமில்லையோ, அவன் எப்போதும் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகிக் கொண்டே இருப்பான். எவன் ஒருவனுக்கு விந்து நீர்த்து போய் இருக்கிறதோ, அவன் உடல் பலவீனமாகவே இருக்கும். தண்ணீர் இல்லாமல் பூமியே வறண்டு வெடிப்பு விட்டு ஊரே உருக்குலைந்து காணப்படுவது போல,சுக்கிலம் குறையக் குறைய உடல் வறண்டு, தோல் சுருங்கி, தேகம் உருக்குலைந்து போய் விடுகிறது. நமக்கு ஒரு உயிர் அணுவைக் கூட உற்பத்தி செய்யத் தெரியாது. நமக்காக நம் உடல் உயிர் அணுக்களை உற்பத்தி செய்து தருகிறது. நாமோ அதையெல்லாம் வீணே செலவு செய்வதோடு, பலமில்லாத அடுத்த தலைமுறையையும் உருவாக்கி விடுகிறோம். அவர்களுக்கு நாம் சேர்த்து வைத்த ஒரே சொத்து வியாதிகள்தான்.

தண்ணீர் வளத்தை ஒத்துதான் நிலத்தின் வளம் அமையும். ஏனைய எல்லா சத்துக்களும் இருந்தாலும் நீர் வளம் இல்லாத நிலம் தரிசே. சில சித்தர்களின் பாடலைக் கேட்கும் போது, இவர்கள் ஏன் இப்படி உடலையும், பெண்களையும், காம உணர்வுகளையும் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அது ஒரு கலை. வெறுப்பை உண்டாக்கி ஒரு விஷயத்தில் இருந்து மனதை மடைமாற்றும் முயற்சி. அவ்வளவுதான். மழையே இல்லாமல் தண்ணீர் கிடைக்காத தேசத்தில் ஏரித் தண்ணீர் இருக்கும் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதுவும் வறண்டு போனால், அவ்வளவுதான் பஞ்சம், பசி, பட்டினி, நோய், களவு எல்லாம் ஏற்பட்டுவிடும். பயிர்கள் பஞ்சத்தில் வாடுவது போல், தலையில் உள்ள மயிர்கள் நரைத்துப் போய்விடுகிறது. அதன் மினுமினுப்பு மாறி விடுகிறது. மனிதனைத் தவிர எந்த இனமும் சுய இன்பம் அனுபவிப்பதில்லை. கருவுற்ற பெண் இனத்தோடு கூடுவதில்லை. தன்னுடைய உயிர் பொருளை வீணாக்குவதில்லை. தன்னால் இயலாத நிலையில் முயற்சிப்பதில்லை. எந்நேரமும் அதே சிந்தனையிலேயே இருப்பதில்லை. வாடிய பயிர்களைக் கண்டு மட்டுமல்ல இவ்வாறு உயிர் பொருளை இழந்து தவிக்கும் மனிதர்களையும் கண்டு வாடினார் வள்ளல் பெருமான். ஆகவேதான் சாகாக் கலையை கடை விரித்தார். ஆனால் கொள்வார் இல்லையே என்பதுதான் அவர் வருத்தம்.

நாம் எல்லோரும் நினைப்பது போல் உடலுக்குள் உயிர் இல்லை. உயிருக்குள்தான் உடல் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு உடலை உயிரோடு சேர்த்தே பல காலம் இருத்துவதே தவம். இப்படி உயிரை உணர்ந்து, உயிரோடு உடலை இணைத்துப் பழக்கப்பட்டவர்கள், இதையே பேரின்பம் என்கின்றனர். இந்த இன்பத்தை விட சிறந்த இன்பம் வேறில்லை என்று நம்மை விட்டு ஒதுங்கிப் போய் வாழ்கிறார்கள். காரணம் நமது எந்த கருத்துக்களிலும், செயல்களிலும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை

:மௌனத்தின் நாதம்'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக