மனம் ஒரு நிலையில் நிறுத்துவதற்கு அது நாலாபக்கமும் வெறிநாய் போல ஓடிக் கொண்டிருக்காமல் கட்டுப்படுத்த வேண்டும். அது எங்கே ஓடுகிறது ? எந்த வழியாக ஓடுகின்றது ? என்று பார்க்கப் போனால் அது புலன்கள் வழியாகவே ஓடுவது புரிய வரும். ஐந்து புலன்களின் மூலம் அவை சம்மந்தப்பட்ட பொருள்களின் மீது பற்று வைப்பதால்தான் மனிதன் தன்னுடைய சிறப்பியல்புகளை, ஆற்றல்களையெல்லாம் இழந்து, துன்பத்தில் சிக்கித் தவிக்கிறான். அதன் மாயவலையில் இருந்து மீளமுடியாமல், இதுதான் பிறப்பின் நோக்கம். இதுதான் சுகம். பிறந்தவர்கள் எல்லோரும் இதை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்று வியாக்கியானம் பேசுகிறான். இதனால்தான் தியானத்தில் அமரும் பொழுது மனம் கட்டறுத்துக் கொண்டு திசை திரும்பி விடுகின்றது. இது மனதின் இயற்கை சுபாவம்தான். ஆசை கொண்ட மனம் புலன்கள் வழியாக அதை அடையத் துடிக்கிறது. அந்த எண்ணங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள ஆரம்பித்தால் அவை நம்மை விட்டு ஒதுங்கி விடும். இது பெண்ணாசை, இது பொருளாசை என்று எண்ணம் எழும் போதே அதைத் தவிர்க்கப் பழக வேண்டும்.
ஆசை வயப்பட்ட மனம் புலன்களை நாடுகிறது. ஐம்புலன்களின் வழியாகவே மனம் தன் இச்சைகளை நுகர்கின்றது. இது குறித்து ஆதி சங்கரர் விவேக சூடாமணி என்கிற தனது நூலில் சொல்லும் பொழுது, மானை வேட்டையாடுகிறவர்கள் இசைக் கருவிகளை வைத்து ஒருவிதமான ஓசையை எழுப்புவார்கள். அந்த இசையைக் கேட்கும் மான் தன்னை மறந்து மயங்கி நின்று அதை கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கும். அதனால் வரும் ஆபத்தை அது உணருவதில்லை. இசையைக் கேட்பதிலேயே கவனமாக இருக்கும். எனவே மானை வேடன் எளிதில் வீழ்த்திவிடுவான். ஆக மான் கேட்பது அதாவது செவி என்ற புலன் மயக்கத்தில் அழிகின்றது. அது போல அந்தக் காலத்தில் யானையைப் பிடிப்பதற்கு என்ன செய்வார்கள் தெரியுமா ? ஒரு பழகிய பெண் யானையைப் பயன்படுத்தி அதை மயக்கிப் பிடித்துவிடுவார்கள். அந்த பெண்யானையின் ஸ்பரிச சுகம் என்கிற பலவீனமே அவ்வளவு பெரிய, வலிமையான யானையைக் கூட வீழ்த்தி விடுகிறது. அதன் சுதந்திரம் பறிபோய், அதற்குப் பிறகு அதன் அந்திம காலம் மட்டும் அடிமையாகவே வாழ்ந்து மடிகிறது.
சில பூச்சிகள் விளக்கைப் பார்த்ததும், அந்த ஒளியின் மேல் ஆசை கொண்டு விளக்கைச் சுற்றி சுற்றி வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அடுத்த நிகழ்வு மிகவும் சோகமானதல்லவா ? அந்த ஒளியின் பால் கொண்ட மயக்த்தினால், அருகே போனால் சுடும் என்பதை மறந்து, ஜுவாலைக்குள் விழுந்து மடிந்து போகும். இத்தனைக்கும் காரணம் பார்வையினால் வந்த மயக்கம். மீனைப் பிடிப்பவன் தூண்டிலில் புழுவை மாட்டி அதைத் தண்ணீரில் போட்டுக் காத்திருக்கிறான். அந்த புழுவின் சுவைக்கு ஆசைப்பட்டு மீனானது ஆபத்தை உணராமல் தூண்டிலில் மாட்டிக் கொண்டு துடிக்கிறது. பின்பு மடிகிறது. இதற்குக் காரணம் சுவை மீது உள்ள பற்றுதான். வண்டானது தாமரை மலரின் மகரந்த வாசனையில் மயங்கி அதிலேயே அமர்ந்து விடுகின்றது. மாலை வந்தது. ஆதவன் மறைகிறான் மலரின் இதழ்கள் மூடிக் கொண்டன. வண்டு உள்ளே மாட்டிக் கொள்கிறது. இரவு நீரைக்குடிக்க வந்த யானைகள் தடாகத்தையே ஒரு கலக்கு கலக்குவதோடு நில்லாமல், மலர்களைப் பிய்த்து மேலே அடித்துக் கொள்கின்றன. உள்ளே இருந்த வண்டு மடிந்து போகின்றது. இது முகர்வதால் வந்த மயக்கத்தின் பரிசு. இதைப்போலத் தேனீக்கள் மணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு தேனைச் சேர்த்து வைத்தாலும், கடைசியில் யாரோ ஒருவர் அதை எடுத்துக் கொண்டு போய்விடுகிறார். ஆக இவைகள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலன் மயக்த்தினால் தம் முடிவைத் தாமே தேடிக் கொள்கின்றன.
மனிதனோ இந்த ஐந்து புலன்களின் வழியிலும் பற்று வைத்து மயங்கிக் கிடக்கிறான் என்கிற போது அவன் கதி என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு புலன்களின் மேல் பற்று வைத்தவைகளே இவ்வாறு அழிந்து போவதைக் கண்ட பிறகு, ஐந்து புலன்களின் மேல் பற்று வைத்து மயங்கிக் கிடக்கும் மனிதன் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ஐந்து பிராணிகளும் தம் சொந்த செய்கைகளுக்காக பாவத்தை அடைவதில்லை. பிராணிகளாக இருந்து துன்பமடைந்து இறந்து விடுகின்றதன. ஆனால் மனிதனோ, புலன் மயக்கத்தில் கொண்ட பற்றின் காரணமாக எத்தகைய பாவங்களைச் செய்யவும் தயங்குவதில்லை. அது அவனை மேலும் கீழ்நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்திரிய விஷயத்தில் மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளாத வரை அவனுக்குத் துன்பமே தொடர்கதையாகிப் போகும். ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதால் ஏக்கங்கள் தணிந்து போகும் என்று நினைத்தால் அது தவறாகும். எண்ணெய் இடப்பட்ட நெருப்பு போல மேலும் கொழுந்து விட்டு எரியும். எண்ணங்கள் மேலும் மேலும் விருத்தியடைந்து, மனம் தன் வலிமையை இழந்து, அமைதியையும் இழந்து பலவீனமடையும் என்று விளக்கி அருளியிருக்கிறார்.
இவ்வளவையும் அவர் எதற்காகச் சொன்னார் ? என்றால், புலன் நுகர்வுப் பற்றுதலினால் நம் மன அமைதிக்கு பங்கம் நேரிடுகிறது என்பதை உணர்ந்து, பற்றுதலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விட வேண்டும் என்பதற்காகத்தான். குருவோ, ஆச்சாரியரோ புதிதாக எதையும் வருவிப்பதில்லை. ஆச்சாரியர் என்றால் வாழ்ந்து காட்டுபவர். குரு என்றால் அஞ்ஞான இருளை அகற்றி அறிவொளியை பிரகாசிக்கச் செய்பவர் என்று பொருள். மனிதர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவைகளை நீக்குபவரே குரு. எத்தனையோ மகான்கள் ஆச்சாரியர்களாக வாழ்ந்து காட்டியதோடு, குருவாக நின்று அவற்றை விளக்கியும் அருளியிருக்கிறார்கள். பிற்காலத்தில் என்றோ பிறக்கப் போகிற நமக்காக இவ்வளவு நல்ல விஷயங்களை தந்தருளியிருக்கும் ஆச்சாரியர்கள், குருமார்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்னவென்றால், அவர்கள் கூறிய கருத்துக்களைக் கற்று, உணர்ந்து, தெளிந்து அவற்றைக் கடைபிடிப்பது மட்டுமே, வேறொன்றுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக