புதன், 7 மே, 2014

மனதில் சஞ்சலம்

மன்னன் ஒருவனுக்கு எல்லாம் இருந்தும் நிம்மதியில்லை. மனதில் எப்பவும் சஞ்சலம் தான். ஒருநாள் கிழிந்த உடைகளை உடுத்தி கொண்டிருந்த துறவியை பார்த்தான். அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றான் . அது ஒரு குடிசை. அன்று பிச்சை மூலம் கிடைத்த உணவை சாப்பிட்ட துறவி சிறிது நேரத்தில் தியானத்தில் ஆழ்ந்தார். சிலமணி நேரத்திற்கு பிறகு கட்டாந்தரையில் நிம்மதியாக உறங்கினார்.

நமக்கு எல்ல வசதிகளும் இருக்கிறது… பஞ்சு மெத்தையில் படுத்தும் நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஆனால் எந்த வசதியுமே இல்லாத இந்த துறவி நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கிறாரே என எண்ணினான்.

துறவி எழுந்த பின் அவரிடம் தன்னை அறிமுக படுத்திக்கொண்ட மன்னன் “சுவாமி ! எல்லா வசதிகளும் எனக்கு உண்டு. மிகப்பெரிய நாட்டை ஆண்டு வருகிறேன். ஆனால் மனதில் எப்பவும் சஞ்சலம் தான் . ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க முடிவதில்லை.. ஆனால் எந்த வசதியும் இல்லாத தாங்கள் , நிம்மதியாக வாழ்கிறீர்கள் இது எப்படி? என்று கேட்டான். துறவி சிரித்தார்.

“இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் அரண்மனையில் சில காலம் தங்க வேண்டும். எல்லா வசதிகளும் செய்து தர வேண்டும், கேட்பதை கொடுக்க வேண்டும்.” என்றார் துறவி, மன்னன் சம்மதித்தான்

அரண்மனைக்கு வந்த துறவிக்கு ராஜ மரியாதை நடந்தது. மன்னனை போலவே பஞ்சு மெத்தையில் தூங்கினார். நகைகளை கேட்டு அணிந்து கொண்டார் .

சில நாட்கள் கழிந்தது. மன்னனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மன்னனும் எதுவும் கேட்கவில்லை. நாட்கள் கடந்தன. துறவியின் ராஜவாழ்க்கை தொடர்ந்தது. மன்னன் தினமும், துறவி ஏதாவது சொல்வார் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்க, ஆனால் துறவி அதைப் பற்றியே கவலைப்படாமல், அரண்மனை தந்துள்ள உல்லாச வாழ்க்கையை அனுபவிப்பதிலேயே குறியாக இருந்தார்.

“நாம் ஏமாந்து விட்டோம். இவர் போலி துறவி. ராஜ வாழ்க்கை கிடைத்த உடன் பழைய வாழ்கையை மறந்து விட்டார். இன்று அவரையே கேட்போம் பதில் சொல்லாவிட்டால் அரண்மனையிலிருந்து போக சொல்லி விடுவோம்” என்று முடிவு செய்து துறவியிடம் சென்றான் மன்னன்.

“சுவாமி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் , அரண்மனை வாசத்தை அனுபவித்து வருகிறீர்கள். இதுதான் உங்களது பதிலா ?” என்று கேட்டான் . 
துறவி இபோதும் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள் ? பதில் தெரியாவிட்டால் அரண்மனையிலிருந்து சென்று விடுங்கள்” என்றான் மன்னன்.

“இதைதான் மன்னா எதிர்பார்த்தேன். இந்த நிமிடமே அரண்மனையை விட்டு சென்று விடுகிறேன். அடுத்த நிமிடம் முதல் எனக்கு குடிசை வாசம் .இதை சந்தோசமாக ஏற்று கொள்கிறேன் . உன்னால் அரண்மனை வாசத்தை , அதிகாரத்தை விட்டுவிட்டு வரமுடியுமா ? என்று கேட்டார் துறவி..

அது எப்படி முடியும் ? என்று கேட்டான் மன்னன்.

இதுதான் மன்னா உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம். ஏனெனில் எனக்கு எதன் மீதும் பற்றில்லை. இறைவன் எண்ணப்படிதான் எதுவும் நடக்கும் என்று அதீத நம்பிக்கை உள்ளவன் நான் . என்னை துறவியாக படைத்த இறைவன் , உன்னை மன்னனாக படைத்துள்ளான்.

இறைவன் எண்ணத்தால் தான் எனக்கு சில நாட்கள் அரண்மனை வாசம் கிடைத்தது அது முடிந்து விட்டது இதோ குடிசைக்கு திரும்புகிறேன் இறைவன் நினைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பதால் , எதன் மீதும் எனக்கு அக்கறை இல்லை , பற்றில்லை . இதனால் என் மனதில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார் துறவி

உண்மைதான். இறைவன் எண்ணப்படி நடக்கும் இந்த உலகில், நம்முடைய விருப்பம் எதுவும் இல்லை எல்லாம் அவன் செயல் என்ற எண்ணத்துடன் வாழ்ந்தால் வாழ்கையில் எதுவும் நம்மை பாதிக்காது. மனதில் சஞ்சலம் ஏற்படாது. எப்போதும் நிம்மதிதான்.


படித்ததில் பிடித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக