வியாழன், 8 மே, 2014

அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.



தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.

 ‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் – இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி,

ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.

ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.
மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.

raas_leela

எங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.

நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!

narada-kund

இந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.

இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  – பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.

இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?

நன்றி:தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக